மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இவர் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை இந்திய இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தித்வா சூறாவளியினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மற்றும் நிவாரண ஏற்பாடுகள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
அதற்கு பதிலளித்த இவர்கள், நிவாரணம் வழங்கல் நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் மாகாண சபைகள் இயங்கு நிலையில் இல்லாததன் காரணமாக தாம் அந்தப் பணிகளில் உள்வாங்கப்படவில்லை என குறிப்பிட்டனர். மாகாண சபைகள் இயங்கு நிலையில் இருந்திருந்தால் இந்த நிவாரண வழங்கல் செயன்முறைகள் அதனூடாக ஒழுங்கிணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொதுத் தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாம் ஆட்சியமைத்திருக்கும் உள்ளூராட்சி மன்றங்களையும் முழுமையாகப் புறக்கணித்து விட்டு ‘பிரஜா சக்தி’ எனும் பெயரில் வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும் அந்தப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது பற்றி தகவல்கள் இல்லை என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் எடுத்துக் கூறியுள்ளனர்.
தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருட காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம் இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு ஏதுவாக இரா. சாணக்கியனினால் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி மாகாண சபை முறைமையை நீக்கி விட்டு நிறைவேற்று அதிகாரமுள்ள ஆளுநர் முறை உள்ளிட்ட வேறு முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, பேரனர்த்த சூழ்நிலையை காரணமாகக் குறிப்பிட்டு அரசாங்கம் மாகாண சபைதை் தேர்தலை பிற்போடுவதற்கு இடமளிக்கக் கூடாது. மாகாண சபைகள் என்பது இந்தியா பெற்ற குழந்தைகள். நாங்கள் அதனை வளர்ப்பவர்கள். எனவே, அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது. ஆகவே மாகாண சபைத் தேர்தல்களை விரைந்து நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைவிட புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக பெயர் எதுவாக இருப்பினும் அர்த்தமுள்ள சமஷ்டி தீர்வு உள்வாங்கப்படுவதற்கும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கும் இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
உண்மையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபைத் தேர்தலை நடத்தும் விடயத்தில் இழுத்தடிப்பு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இதேபோன்றே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்திலும் அரசாங்கமானது ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இதுவரை ஈடுபடவில்லை.
தேசிய மக்கள் சக்தியானது ஜனாதிபதித் தேர்தலின் போதும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை விட்ட இடத்திலிருந்து தொடர்வதன் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் தீர்வு காணப்படும் வரை மாகாண சபை முறைமை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்தது.
ஆனால், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும் அரசியல் தீர்வு தொடர்பிலோ புதிய அரசியலமைப்பு குறித்தோ அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. மாகாண சபை தேர்தல்களையாவது நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த விடயத்திலும் அரசாங்கம் தான்தோன்றித்தனமான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு தயார் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரணையொன்றையும் முன்வைத்திருந்தார். ஆனால், அந்த நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் தற்போது மாறியிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாகாண சபைத் தேர்தல் முறைமையினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க தொகுதி, விகிதாசார முறைமைகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட்டது. புதிய மாகாண சபை முறைமையை உள்ளடக்கிய திட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததையடுத்து புதிய முறைமை அமுல்படுத்தப்படவில்லை.
தற்போது நாட்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உரிய சட்டம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இதனை சாட்டாக வைத்துக்கொண்டு அரசாங்கமானது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடித்து வருகின்றது.
மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறைமையில் நடத்துவதற்கான தனி நபர் பிரேரணையொன்றினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டு வந்திருந்தார். ஆனால், அந்தப் பிரேரணை அன்றைய அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் காலத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான தனி நபர் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அன்று சுமந்திரன் சமர்ப்பித்த பிரேரணையையே சாணக்கியன் புதிதாக சமர்ப்பித்தார்.
இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் உடனடியாகவே பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும். ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறைகொள்வதாக இல்லை. மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து முதலில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது.
புதிய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டுமானால் அதற்கு எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கு ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும். ஆணைக்குழு அமைத்து எல்லை மீள் நிர்ணயம் செய்வதற்கு ஒரு வருடமாவது செல்லலாம் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.
இவ்வாறு சாக்குபோக்குகளைக் காண்பித்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது பிற்போடுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயன்று வருகின்றது. இதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான உரிய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் கையொப்பமிட்டு கடிதமொன்றையும் ஜெய்சங்கரிடம் கையளித்திருக்கின்றனர்.
தற்போதைய நிலையில் நாட்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. இதற்கு இந்தியாவின் அழுத்தங்கள் அவசியம் என்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களது கோரிக்கை நியாயபூர்வமானது. இதற்கான நடவடிக்கையினை இந்தியா எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM