வவுனியா, கனகராயன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பொதுக்காணியை பொலிஸார்  கையகப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது.

குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 

இந்நிலையில் கனகராயன்குளம் சந்தியை அண்மித்து காணப்படும் கிராமிய அபிவிருத்திச் சங்கத்திற்குரிய காணியை விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டு அந்தக் காணியை விடுவிப்பதாக பொலிஸார் உறுதியளித்தனர்.

இருப்பினும் பொலிஸார் அதனை விடுவிக்காது தற்போது அந்தக் காணிக்குரிய வேலிகளை பலப்படுத்தி வருவதுடன் அக் காணியை தமது விளையாட்டு திடலாகவும்,  பொலிஸ் அதிகாரிகள் தங்கிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த காணியை பொலிஸார் விடுவித்து அப்பகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.