மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவிலுள்ள நினைவுத்தூபி புனருத்தாபனப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.

1987 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் இராணுவப்படை நடவடிக்கைகளின் போது படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவாக இத் தூபி 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஸ்தாபிக்கப்பட்ட இத் தூபி 2007ஆம் ஆண்டு படுவான்கரை படை நடவடிக்கைகளின் போது படையினரால் சேதமாக்கப்பட்டது.

படையினரால் சேதமாக்கப்பட்ட இந் நினைவுத்தூபியானது நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட  குறித்த படுகொலை தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வந்த போதிலும் இது வரை வரைகாலமும் புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது.

அப் பிரதேச மக்கள் நினைவுத்தூபி புனரமைக்கப்படாமை தொடர்பாக ஆட்சியாளர்களுக்கெதிராக தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையிலேயே முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தனது சொந்த செலவில் தூபி புனரமைக்கும் பணியை மேற்கொண்டார்.

கோவிந்தன் கருணாகரன் மூன்று இலட்சம் சொந்த நிதியில் முன்னெடுத்த இப்பணியில் அப் பிரதேச இளைஞர்களது பங்களிப்புடன் நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கோவிந்தன் கருணாகரன் தலைமையில் நடைப்பெற்ற தூபி திறந்து வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் மற்றும் அப் பிரதேச வியாபாரிகள், மக்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.