ஒரு தாய் மக்களின் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் வருகை தந்தனர். ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கிக் கொண்டர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்,

''உலக அரசியல் அரங்கில் அ.தி.மு.க. சரித்திர சாதனையை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க இணைந்திருக்கிறோம்.

ஒரு தாய் மக்களின் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. இந்த இணைப்புக்கு உதவிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அனைவரையும் மீண்டும் காண ஜெயலலிதாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். அ.தி.மு.க.வின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இன்றுடன் என் மனப்பாரம் குறைந்துவிட்டது'' என ஓ.பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.