"பிரபாகரனை தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிரபாகரனை முதல்தடைவையாக சந்திப்பதற்கு நான் சென்றிருந்தபோது இலங்கையில் யாருமே அதனை அறிந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார். இது பிரதமருக்குக் கூடத் தெரியாது.
நாங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தில் பிரபாகரனை சந்தித்தோம்.அதற்காக நாங்கள் உலங்கு வானூர்தியில் சென்றிருந்தோம். தாழ்வாகவும் மேலுயர்ந்தும் பறந்து சென்றது அது. மலைகளாக இருந்திருந்தால் பயங்கரமாக இருந்திருக்கும். நாங்கள் செல்வதை இராணுவத்தினரோ விடுதலைப் புலிகளோ அறிந்திருக்கவில்லை.
அங்கு நாங்கள் பிரபாகரனை சந்தித்தோம்.அது ஒரு நல்ல சந்திப்பு. அமைதி முயற்சிகளில் அவர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மகத்தான நிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
அந்த நேரத்தில் அவர் கடவுளாக மீட்பராக போற்றப்பட்டார்.தமிழ் மக்கள் ஏன் அவரை அப்படி போற்றினார்கள் என்று எம்மால் உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை"
இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும் ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டப் பணிப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தை செலவிடமுடியாமல் போனதற்காக வருந்துகின்றேன் என்றார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவு நட்பு ரீதியானதா அல்லது அதனைவிடவும் அதிகமானதா என்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்
“உலகிலுள்ள வேறெந்த வெளிநாட்டவரையும் விட பிரபாகரனை நான் அதிகமாக அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர் தமிழ் மக்களை பொதுவாக சந்திப்பது வழக்கம். இலங்கையில் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவை ஒருமுறை சந்தித்திருக்கிறார். சில சிங்களவர்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் தமிழ் மக்களை எப்போதும் சந்தித்து வந்தார். அவருடன் இன்னும் கூடுதலான நேரத்தை செலவிட்டிருந்தால் நாம் பெரும்பாலும் அவர் மீது இன்னும் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியும்.
பிரச்சினைகள் பற்றி பேசுவதன் மூலம் அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த நாங்கள் முயன்றோம். அவர் உண்மையில் அதுபற்றி அக்கறை கொண்டிருந்தார்.
அவர் நிச்சயம் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.உணவு விடயத்தில் அவர் ஒரு நல்ல சமையல்காரராக அறியப்பட்டார்.இயற்கை மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனாலும் தனிப்பட்ட உறவை வளர்ப்பது கடினமாக இருந்தது.ஏனென்றால் எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருந்தது.மேலும் இலங்கை அரசாங்கத்தினால் வடக்கிற்குச் செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
அதைவிட மொழித் தடையும் இருந்தது.அவர் தமிழில் பேசுவதை புரிந்துகொள்ள எமக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். இறுதியாக அவர் வெளிப்படையாக திறந்தநிலையில் இல்லாத பாத்திரவகையாகவே இருந்தார்.
கவர்ச்சிகரமானவராக ஆனால் இன்னும் அதிகம் மூடிய எச்சரிக்கையுடன் அவர் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம் பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. பிரபாகரனின் 12வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம்.
இது முற்றிலும் மிக மோசமான பொறுப்பற்ற தீய செயல். இந்த விடயத்தில் இலங்கைப் படையினர் மிகமிக நன்றாக செயற்படாதமை துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் கூறினார்.
வெள்ளைக் கொடி விவகாரம் குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு எரிக் சொல்ஹெய்ம் பதிலளிக்கையில்
போரின் இறுதிக்கட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி விடுதலைபுலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் நான் அவருடன் நேரடியாகப் பேசவில்லை வேறுஒருவரே அவருடன் பேசினார்
அத்துடன் இந்த உரையாடலின்போது தாம் வழங்கிய வாய்ப்புக்களை உதறிவிட்டு காலம் கடந்து உதவி கோருவதாக புலித்தேவனுக்கு பதிலளித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அது மே 17ஆம் திகதி. அது நோர்வேயின் தேசிய நாளும் கூட.அதனால் நினைவில் வைத்திருக்கிறேன். ஒஸ்லோவில் அணிவகுப்புக்காக நான் சென்று கொண்டிருந்தேன்.அப்போது புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவர் விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார்.
இலங்கை இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகவும் அதற்கு எம்மால் உதவ முடியுமா என்றும் அவர் எம்மிடம் கேட்டார்.
நான் அவருடன் நேரடியாக பேசவில்லை. ஆனால் நாங்கள் தலையீடு செய்வதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது என்று நோர்வேஜிய சகா ஒருவர் அவருக்கு கூறினார்.ஏனென்றால் போர் முடிவுக் கட்டத்தை நெருங்கி விட்டது.
நாம் தலையீடு செய்வதற்கு சாத்தியங்கள் இருந்தபோது போராட்டத்தைக் கைவிடுவதற்கு முன்னர் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியிருந்தோம் என்பதை நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். ஆனால் இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது என்று கூறினோம்.
அத்துடன் பெரியதொரு வெள்ைளக் கொடியை ஏந்திச் செல்லுங்கள் ஒலிபெருக்கிகள் மூலமோ வேறெந்த வழியிலோ உங்களின் எண்ணத்தை இலங்கை ஆயுதப் படைகளுக்கு தெரியப்படுத்துங்கள் என்பதைத் தான் எம்மால் உங்களுக்கு கூறமுடியும்.
எமது பக்கத்திலிருந்து இலங்கைத் தலைவர்களுக்கு சரணடைய விரும்பும் உங்களின் விருப்பம் தெரியப்படுத்தப்படும் என்று அவரிடம் நாம் கூறினோம்.
அதன்படியே நிச்சயமாக அதனை இலங்கைத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். நாங்கள் அதனை ராஜபக் ஷவின் ஆலோசகரான பசில் ராஜபக் ஷவுக்குத் தெரியப்படுத்தினோம்.
நாங்கள் மட்டுமல்ல முக்கியமான சில தமிழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்தனர். சில இந்திய இடைத்தரகர்களும் கூட இலங்கை தலைமைக்கு தகவல் அனுப்பினார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒருநாள் கழித்து நடேசனும் புலித்தேவனும் கொல்லப்பட்டுவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை.
அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் சரியாக எனக்கு தெரியவில்லை. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்று.
எனினும் பிரபாகரனின் 12வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம். இது முற்றிலும் மிக மோசமான பொறுப்பற்ற தீயசெயல்.
இந்தக் கொலைகள் தொடர்பாக பெரியதொரு கேள்விக்குறி உள்ளது.ஏன் அவர்கள் சரணடைதலை ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அவர்களை ஏன் கொன்றார்கள் என்று தெரியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM