“சுற்றி நில்லாதே பகையே, துள்ளி வருகுதுவேல்” என்பதற்கமைவாக தனிப்பெருங்கடவுளாக நின்று, அடியார்களுக்கு அருளமுதை வழங்கிக் கொண்டு நல்லையம்பதியில் வீற்றிருக்கின்றார் கலியுக வரதப்பெருமாளான முருகப்பெருமான்.
வரலாற்றுப் பெருமையும், ஆன்மிகச் சிறப்பும் கொண்டது நல்லூர்ப் பிரதேசம். தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தின்போது, நல்லூர் இராசதானியாக விளங்கியது. சைவத்தையும் தமிழையும் போற்றிப் பாதுகாத்து வந்த ஆறுமுகநாவலர் போன்ற அறிஞர்கள், ஞானிகள், சித்தர்கள் என்போர் பிறந்து, வாழ்ந்து, சிறப்பித்த இடமாக நல்லையம்பதி விளங்குகின்றது. செல்லப்பா சுவாமிகள் நல்லூர் தேரடியில் வாழ்ந்தவர்.
இவரது சீடரான யோகர் சுவாமிகள் அவர்களும் நல்லூர் கந்தனுடைய திருவருள் பெற்றவர். நல்லூருக்குப் பெருமை சேர்க்கும் நாவலர் பெருமானின் நினைவு மண்டபம், கலாசார மண்டபம் என்பன நல்லூரில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. நல்லை நகர் திருஞான சம்பந்தர் ஆதீனம், திவ்ய ஜீவன சங்கம், துர்க்காதேவி மணிமண்டபம், இந்து மாமன்றம் போன்ற சமய, கலாசார மன்றங்களும், நல்லூருக்கு நற்சிறப்புகளை ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களுள் முதன்மை பெற்றுத் திகழும் நல்லைக் கந்தன் ஆலயம் ஆன்மிகச் சிறப்புகளை கொண்டது. நல்லையம்பதியிலே இந்து ஆலயங்கள் பல இருந்தாலும் நல்லைக் கந்தன் ஆலயத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆறுபடை வீடுகளிலே உறைகின்ற முருகப் பெருமான் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கோயில் கொண்டெழுந்தருளி அடியவர்களுக்கெல்லாம் அருளமுதை வழங்கிக் கொண்டு அரசாட்சி செய்கின்றார். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் அலங்காரக் கந்தனாகப் போற்றப்படுகின்றார். முருகப் பெருமானின் அருட் பொலிவும், தெய்வ சாந்தி நித்தியமும் நல்லூரின் சிறப்புகளுக்கு அணி செய்வனவாக இருப்பதைக் காணலாம். அழகே உருவான அலங்காரக் கந்தனாக நல்லையம்பதியிலே எழுந்தருளியிருந்து, தன்னை விரும்பித் தொழுமடியார்களுக்கு நல்லருள் புரிகின்றார். அழகன் முருகன் நல்லையம்பதியில் வீற்றிருந்து எல்லோரையும் வாழ வைக்கின்றான். மணிக்கோபுரத்தின் மணியோசை ஆலயத்தின் நாலாபக்கமும் ஒலிக்கின்றது. மணியோசையின் மூலம் அடியார்களைத் தன்வசப்படுத்தி அருளாட்சி செய்கின்றான். தமிழுக்கும் முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைச் சாத்திரங்கள் கூறுகின்றன. இலக்கிய நூல்களில் கூறப்படுகின்றன. முருகன் என்றும் அழகும் இளமையும் கொண்டு விளங்குகின்றான். மாமுனிவர் அகத்தியருக்கு தமிழ் உரைத்தவன் முருகன். ஏனைய ஆலயங்களுக்கு இல்லாத பெருமைகளும் சிறப்புகளும் இவ்வாலயத்திற்கும் இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் அழகுக்கந்தன் முருகனுக்கும் உண்டு எனலாம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் இவ்வருட மகோற்சவம் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா வெகுசிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் கோலாகலமாகவும் நல்லையம்பதியில் நடைபெறுகின்றது. தேர்த்திருவிழாவன்று யாழ்நகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். நல்லை நகர் வீதிகள் எல்லாம் விழாக்கோலம் பூண்டு புனித நகரமாகக் காட்சியளிக்கும். இன்றைய தேர்த்திருவிழாவன்று நல்லைக்கந்தன் தேரில்வந்து அடியார்களுக்கு காட்சிகொடுக்கின்ற காட்சியை நேரில் கண்டு அருட்கடாட்சத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைத் திருநாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நயினைம்பதியில் கூடுவார்கள்.
கைதான் தலைமேல் வைத்து கண்ணீர் ததும்பி, வெதும்பி கந்தப்பெருமானை அடியார்கள் வழிபடும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.
முத்தமிழால் வையகத்தாரையும் வாழவைக்கின்ற முருகன் இன்று சித்திரத் தேரிலே அழகுத்திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும். அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூஜைகள் முதலியன காலக் கிரமம் தவறாது நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப் பெருமான் தேரேறி வீதியுலா வருவதற்குப் புறப்படுவார். சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் ஆறுமுகப் பெருமான், கஜவல்லி, மகாவள்ளி சமேதரராக எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்புரிகின்ற காட்சியைக் கண்ணாரக் கண்டு நேரில் தரிசனம் செய்ய வேண்டும்.
பஜனைக் கோஷ்டிகள் ஒருபுறம், காவடிகள் ஒரு புறம், தூக்குக் காவடிகள் ஒருபுறம், கற்பூரச் சட்டிகள் ஏந்தும் பெண்கள் ஒருபுறம். இப்படியாக அடியார்கள் பக்திக் கோலத்துடன் தேர் வீதியுலா வரும்போது, தேருடன் வருவதை அற்புதக் காட்சி எனலாம். அடியார்கள் ‘அரோகரா’, ‘அரோகரா’ எனவும், 'முருகா ஓம் முருகா' எனவும் முருகனின் புகழ்பாடி வருகின்ற காட்சி தெய்வீகக் காட்சியாகும். நல்லூர் கந்தனின் தேர்வடம்பிடித்தால் மிகப் பெரும் புண்ணியமாகும்.
வடம்பிடித்தவர்கள் முருகப்பெருமானின் திருவடியில் இடம்பிடித்தவர்கள். இதனால் அடியார்கள் தேர் வடம்பிடிப்பதற்காக முந்திக் கொள்வதை நான்கு வீதிகளிலும் காணலாம். தேரில் உலாவரும் ஆறுமுகப் பெருமானை ஒருமுறையாவது கண்ணாரக்கண்டு தொழ அடியார்கள் முந்திக்கொள்வதை வீதிகள் எங்கணும் காணலாம். “யாம் இருக்கப் பயமேன்” என்று அபயமளித்து நம்மைக் காப்பவன் ஆறுமுகப் பெருமானல்லவா நல்லையம்பதியில் அருள் மழை பொழிகின்றார்.
மற்றைய இடங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு நல்லூர்த் தேரடிக்கு மட்டும் உண்டு. தனிச்சிறப்பு எவ்வாறு நல்லூர்த் தேரடிக்கு வந்ததென்பதை நோக்குமிடத்து செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்ற பெருமைக்குரிய பெரியார்கள் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்தமைதான் காரணமாகும். பெரியார்களுடைய திருவடிகள் பதிந்த இடம் நல்லூர்த் தேரடியாகும். இன்றும் நல்லூர்த் தேரடியில் அருளலை வீசிக்கொண்டேயிருக்கிறது. பல சிவனடியார்கள் நல்லூர்த் தேரடியில் அனுதினமும் ஒன்றுகூடி நற்சிந்தனைப் பாடல்கள், திருவாசகம், கந்தபுராணம், திருப்புகழ் பாடல்கள் போன்றவற்றைப் பாடிவருகின்றனர். அடியார்கள் இவற்றைக் கேட்டுப் பக்தியில் உறைகின்றனர்.
தேர் வீதிவலம் வந்தபின்னர் சண்முகப் பெருமானுக்குப் பச்சைச்சாத்தி, தேரிலிருந்து ஆலயத்துக்குத் திரும்புவார். பச்சை நிற ஆடைகள் அணிவித்து, பச்சை நிற அலங்காரம் செய்து, அலங்காரக் கந்தனாக வருகின்ற காட்சி பக்தர்களின் மனதை உருக்கும் அற்புதக் காட்சியாக இருக்கும்.
இத்தனை சிறப்புகள் பொருந்திய அருட்காட்சிகளை நல்லையம்பதியில் அடியார்கள் காண்பதற்கு பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
நல்லூர் கந்தன் வீதியுலா வருவதை எமது வீரகேசரி இணையதளத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM