19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இலங்கை

Published By: Vishnu

15 Dec, 2025 | 10:01 PM
image

(நெவில் அன்தனி)

துபாய், ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை, அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

விரான் சமுதித்த  குவித்த அரைச் சதம், சாமிக்க ஹீனட்டிகலவின் சகலதுறை ஆட்டம் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

திமன்த மஹாவித்தான (27), விரான் சமுதித்த ஆகிய இருவரும் 9.3 ஓவர்களில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், மஹாவித்தான, கித்ம வித்தானபத்திரன (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் விரான் சமதித்த, கவிஜ கமகே ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினர்.

கவிஜ கமகே 34 ஓட்டங்களையும் விரான் வித்தானபத்திரன 62 ஓட்டங்களையும் பெற்று சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 38ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது.

ஆனால், அணித் தலைவர் விமத் தின்சார (15), ஆதம் ஹில்மி (3), துனித் சிகேரா (22), செத்மிக்க செனவிரத்ன (1) ஆகிய நால்வரும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (217 - 8 விக்.)

எனினும் விரான் சமுதித்த, ரசித் நிம்சார ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 21 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தனர்.

விரான் சமுதித்த 51 ஓட்டங்களுடனும் ரசித் நிம்சார 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 42 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்ததால் அதன் மொத்த எண்ணிக்கை 240 ஓட்டங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் கடைசி 5 விக்கெட்கள் 27 ஓட்டங்களுக்கு சரிந்தன.

துடுப்பாட்டத்தில் ஒஸ்மான் சதாத் 52 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 39 ஓட்டங்களையும் அஸிஸுல்லா மியாக்கில் 31 ஓட்டங்களையும் நூரிஸ்தான் ஓமர்ஸாய் 29 ஓட்டங்களையும் உஸைருல்லா நியாஸாய், அணித் தலைவர் மஹ்பூப் கான் ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பைசால் ஷினோஸதாவுடன் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களையும் உஸைருல்லா நியாஸாயுடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் ஒஸ்மான் சதாத் பகிர்ந்ததாலேயே ஆப்கானிஸ்தான் இளையோர் அணி நல்ல நிலையை அடைந்தது.

பந்துவீச்சில் துனித் சிகேரா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் செத்மிக்க செனவிரத்ன 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரசித் நிம்சார 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சாமிக்க ஹீனட்டிகல

முக்கிய செய்திகள்

icon-left
icon-right