மூளை மற்றும் உடலின் மற்ற அவய வங்கள் அனைத்தையும் இணைப்பதுடன், அந்த அவயவங்கள் முறையாக இயங்கு வதற்கான கட்டளைகளை மூளையில் இருந்து எடுத்துச் சென்று சேர்ப்பிக்கும் முக்கியமான பணியை நரம்புகளே செய்கின்றன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் இந்த நரம்புகளின் செயற்பாடு தடைப்பட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விளக்குகிறார் டாக்டர். P.வெங்கடேஷ். இவர், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர்.
பக்கவாதம், வலிப்பு, கை கால் அசைக்க இயலாமை, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, ஆட்டிஸம், ஏ.டி.எச்.டி என நரம்புகளுடன் தொடர்புடைய பல நோய்கள் உண்டு. நாம் மிகச் சாதாரணமாக நினைக்கும் தலைவலி கூட நரம்பியல் கோளாறுகளின் ஒரு வகையே! ஆனால், தொடர்ச்சியாகவோ, அடிக்கடியோ தலைவலி வந்த யாரும் நரம்பியல் மருத்துவரை நாடுவதில்லை. சுய மருத்துவம் செய்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் கண் மருத்துவர்களை நாடுகிறார்கள். இவை தலைவலிக்கான நிவாரணம் தேடும் தவறான அணுகுமுறைகள். ஏனெனில், 99 சதவீதமான தலைவலி நரம்பியல் கோளாறுகளால் தான் ஏற்படுகிறது. எனவே, அடிக்கடி அல்லது தொடர்ச்சியாகத் தலைவலி வருகிறது என்றால், உடனே நரம்பியல் மருத்துவர்களை அணுகினால், அதற்கான காரணத்தையும் அதைத் தீர்ப்பதற்கு உரிய வழிமுறையையும் தருவார்கள். பல்வேறுபட்ட தலைவலி களுள் ‘மைக்ரேன்’ தலை
வலி எனப்படும் ஒற்றைத் தலைவலியே கடுமையான விளைவுகளைத் தரக்கூடியது. மேலும், இந்த வகைத் தலைவலியால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகவும் இருக்கிறது. தலைவலித் தாக்குதலுக்கு உள்ளாவோரில் 100க்கு 75 பேர் என்ற விகிதத்தில் மைக்ரேனால் பாதிக்கப்படுகிறார்கள். இதை குணப்படுத்த முடியாது என்ற பழைய சித் தாந்தம் என்றோ பழசாகிவிட்டது. இப்போது எளிய முறையிலேயே இதைத் தீர்க்கலாம்.
வலிப்பு என்பது கைகளும் கால்களும் உதறுவதுதான் என்றே பலரும் எண்ணியிருக் கிறார்கள். உண்மை அதுவல்ல. வலிப்புகளி லும் பல வகைகள் உண்டு. ஒரு கையும் காலும் இழுப்பதும் கண்கள் ஒரேயிடத்தில் நிலைகுத்தி நிற்பதும் சில நேரங்களில் பிள்ளைகள் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும்போது, அதை நிறுத்திவிட்டு கனவுலகில் சஞ்சரிப்பது போல் அப்படியே நிலைகுத்தி இருப்பதுவும் வலிப்பு நோயே. சிலர் நன்றாக நடந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று சமநிலை தவறிக் கீழே விழுந்துவிடுவார்கள். சிலர் மின்சாரம் பாய்ந்தது போல் அப்படியே ஒரு சில விநாடிகள் நின்றுவிடுவர். இதுவும் வலிப்புத் தான். இப்படி ஏதேனும் வலிப்பு குறித்த அறிகுறி இருந்தால் உடனடியாக நரம்பியல் மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.
வலிப்பு நோய்க்கு இரும்புப் பொருளைக் கையில் கொடுப்பதற்கான அறிவியல் விளக்கங்கள் எதுவும் இல்லை. எனவே, வலிப்பு வந்துவிட்டால் இரும்பைத் தேடுவதை விட்டுவிட்டு, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வதே சிறந்தது.
அடுத்த பக்கவாதம். பக்கவாதம் ஏற்பட்டால் அருகிலிருப்பவர்கள் தடுமாறிவிடு
கிறார்கள். அவர்கள் செய்யவேண்டியதெல் லாம், பாதிக்கப்பட்டவரை அவர் பாதிப்புக் குள்ளான நான்கரை மணித்தியாலத்திற்குள் நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் காண்பித்துவிட வேண்டும். இதன்போது, பக்கவாதத்தை விரட்டுவதற்காக அண்மையில் அறிமுகமாகியிருக்கும் அதிநவீன சிகிச்சைகளை அவர் முன்னெடுப்பார். இதனால், அடுத்த நாளே நீங்கள் முழுமையாக குணமடைந்துவிட முடியும். ஒருவேளை சிகிச்சை தாமதமானால், அடுத்த நான்கு மணித்தியாலங்களுக்குள் ‘எம்போலத்தெமி’ என்ற சிகிச்சை மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும். எட்டு மணித்தியாலங்கள் கடந்து வந்தால், மூளையில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மட்டுமே முடியும்.
பக்கவாதத்தால் மூளையின் ஒரு பக்கம் வீங்கினாலோ, அந்த வீக்கமானது மற்றொரு பக்க மூளையினை அதிகளவில் அழுத்தத் தொடங்கினாலோ நோயாளிக்கு சத்திர சிகிச்சை அவசியப்படலாம். வேறு சிலருக்கு மூளையில் கட்டி ஏதேனும் ஏற்பட்டிருந்தால் நிலைமையைப் பொறுத்து சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.
இந்த சிகிச்சைகள் சற்று விலை உயர்ந்ததாகத் தெரியலாம். ஆனால், குறிப்பிட்ட இந்தக் குறுகிய காலத்திற்குள் உடனடியாக இந்த சிகிச்சைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால், வாழ்க்கை முழுவதும் பாதிப்பு தொடரும் என்பதையும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
ஏறக்குறைய பக்கவாதத்தை ஒத்த இன்னொரு வியாதி ‘பர்க்கின்ஸன்’. வயதானவர்களை அதிகமாகப் பாதிக்கும் இந்த நோயினால், ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஏதேனும் ஒரு பகுதி மட்டும் இலேசாக நடுக்கம் காணத் தொடங்கும். ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து நரம்பியல் மருத்துவ சிகிச்சை பெற்றால் அதன்பின் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்துவிட முடியும். மாறாக, இதை அடையாளம் காண முடியாமல் அல்லது அலட்சியப்படுத்திவிட்டால், ஒரு கையிலிருந்து இரண்டாவது கைக்கும் இது நீளும். அதன் பிறகு எல்லா இயக்கங்களும் மெதுவாக நடைபெறும். அடிக்கடி கீழே விழுந்துவிடுவார்கள். ஞாபக மறதியும் அதிகமாகிவிடும்.
இன்னொரு முக்கிய நரம்பியல் நோய் பெரிபரல்பால்சி. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடு. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தை பிறந்தவுடன் அழாமல் இருப்பது, குழந்தையின் தலை நிற்காமல் இருப்பது போன்ற பாதிப்புகள் உடனடியாக நரம்பியல் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டிற்குள் அதன் மூளை 90 சதவீதம் வளர்ச்சியடைந்துவிடும். அதற்குள் இதுபோன்ற குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
ஆட்டிஸம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. இத்தகைய பாதிப்பிற்கு மாற்று மருத்துவத்தில் தீர்வு இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், அவை முழுமையானவை அல்ல. ஆட்டிஸத்தில் இருந்து கொஞ்சமாவது விடுபடுவதற்கு பயிற்சிகள் மட்டுமே வழி. நரம்பியல் மருத்துவர்களின் வழிகாட்டலுடன் வழங்கப்படும் உடற்பயிற்சியில் நாளடைவில் முன்னேற்றம் கிடைக்கும்.
அண்மையில் வெளிவந்த ‘பசங்க 2’ படத்தின் மூலம், ஏ.டி.எச்.டி பாதிப்பு குறித்துப் பரவலாகத் தெரியவந்திருக்கிறது. மருந்துகளுடன், பிள்ளைகளுடன் போதிய நேரத்தைச் செலவிடுவது போன்ற சில நுண்ணிய விடயங்கள் மூலம் இதைச் சரிசெய்ய முடியும்.
சில மருத்துவர்கள் போஷாக்குக் குறைபாட்டால் உங்கள் பிள்ளையின் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால், அது தவறானது. போஷாக்குக் குறைபாட்டால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படாது. அத்துடன், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள் வதால் மட்டும் குழந்தையின் குறைபாடு நீங்காது.
இதில் ஓவர் எக்டிவிட்டி என்றும் ஹைப்பர் எக்டிவிட்டி என்றும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. சாதாரண குழந்தைகள் சற்றுத் துருதுருவென அந்த வயதுக்குரிய குறும்புத்தனத்தைச் செய்யும். அதனை அனுமதிக்கவேண்டும். இவர்கள் சூழல் மாறிவிட்டால் தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டுவிடுவார்கள். பொதுவாக வீட்டில் இருக்கும் போது சேட்டை செய்யும் குழந்தை, பாடசாலைக்கு சென்றுவிட்டால் அங்குள்ள சூழலுக்கு தன்னைப் பொருத்திக் கொண்டுவிடும். அதையும் மீறி குறும்பு செய்தால் அதனை அங்குள்ள ஆசிரியர் மிரட்டி அவர்களை இயல்பாக்கி விடுவார்கள். ஆனால் ஹைப்பர் எக்டிவிட்டி உள்ள குழந்தைகளை ஆசிரியர்களாலும் கட்டுப்படுத்த இயலாது. அவர்கள் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்.
இதைக் கண்டறிந்து இரண்டு அல்லது மூன்று வயதிற்குள் சிகிச்சையை தொடங்கிவிட்டால் அவர்கள் விரைவில் குணமடைந்து விடுவார்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் தவறான பழக்க வழக்கங்களுக்கு எளிதில் ஆட்பட்டுவிடுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு
டாக்டர். P.வெங்கடேஷ், M.D D.M., (Neuro).,
மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர்
அலைபேசி: 0091 9500964472
மின்னஞ்சல் முகவரி: venkipgi@gmail.com
சந்திப்பு: பரத்
தொகுப்பு: புகழ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM