இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

10 Dec, 2025 | 03:05 PM
image

புதுமுக நடிகை ஆஷிகா அசோகன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி' எனும் திரைப்படத்தில் ஆஷிகா அசோகன், ஐஸ்வர்யா, பிட்டு தோமஸ், சாண்ட்ரா அனில், சினான், ரேகா, ஹரிஷ் பெராடி, 'நிழல்கள்' ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வீரமணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌதம் வின்சென்ட் இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை அஸ்னா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சையத் தமீன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காகத் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஜே எஸ் கே ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் தனி மனித ஒழுக்கம் அவசியம் என்பதை இந்த படம் உரத்து பேசுகிறது. அத்துடன் தற்போதுள்ள சூழலில் பெண் பிள்ளைகளின் சமூக பாதுகாப்பு பற்றி அவர்களது பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை பற்றியும் இந்த படத்தில் பேசியுள்ளோம்.

தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. புலனாய்வு மற்றும் நீதிமன்றம் தொடர்பான காட்சிகள் மூலம் இப்படத்தின் திரைக்கதை விவரிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதற்கான காரணத்தையும், பின்னணியும் அவளது தோழி தேடத்தொடங்குகிறார். அவர் உண்மையான கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா?  இதன் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்ப படத்தின் திரைக்கதை''  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right