கர்ப்பப்பையில் கட்டிகள் கர்ப்பம் தரிக்க முன்னர் தான் வரும் என பலரும் நினைக்கக்கூடும். ஆனால் கர்ப்பம் தரித்த பெண்களிலும் சில சந்தர்ப்பங்களில் ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது கர்ப்பப்பையில் பைப்புரோயிட் கட்டிகள் மற்றும் சூலகத்தில் ஓவரியன்சிஸ்ற் கட்டிகள் கண்டறியப்படுவது வழமையாகியுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் தாங்கள் சுமக்கும் சிசுவுடன் சேர்த்து கர்ப்பப்பையில் கட்டிகளும் உள்ளது என அறிந்தவுடன் தமது சிசுவுக்கோ தமக்கோ ஆபத்துக்கள் வரக்கூடும் என ஏங்குவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களது சந்தேகங்களுக்கு தீர்க்கப்படக்கூடியவாறான விளக்கங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. ஏனெனில், இப்படியான பிரச்சினைகள் உள்ளவர்கள் பலர் பயப்படக்கூடியவாறான கதைகளை கேட்டு மிகவும் பயந்து போன நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
எனவேதான், கர்ப்பப்பை கட்டிகள் கர்ப்ப காலத்தில் கண்டறியப்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என பெண்களுக்கும் குடும்பத்தினருக்கும் அறியத்தருவது அவசியமாக உள்ளது.
கர்ப்பப்பை கட்டிகள் கர்ப்ப காலத்தில் புதிதாகத் தோன்றுமா?
கர்ப்பப்பையில் பைப்புரோயிட் கட்டிகள் புதிதாக உருவாக மாட்டாது. ஆனால், ஏற்கனவே அதாவது கர்ப்பம் தரிக்க முன்னரே இருந்த பைப்புரோயிட் கட்டிகள் தான் மெதுமெதுவாக வளரக்கூடும். கர்ப்பப்பை ஹோர்மோன்களின் பங்களிப்பால் கர்ப்பப்பை கட்டிகள் பருமனில் அதிகரிக்கின்றன. இதனால்தான் ஏற்கனவே இருந்த கட்டிகள் பெரிதாக மாறுகின்றன.
பைப்புரோயிட் கட்டிகளால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் எவை?
கர்ப்பப்பையில் பல கட்டிகள் உள்ள போதும் பெரிய கட்டிகள் உள்ள போதும் சிலவேளைகளில் கருவானது இயற்கையாக கலையக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இதனை இயற்கையான கருக்கலைதல் நிகழ்வு எனக்கூறப்படும். அது மட்டுமல்ல கர்ப்பத்தில் சிசுவுடன் கர்ப்பப்பை கட்டிகளும் உள்ளபோது வயிற்று வலி இடையிடையே வந்து அவதிப்படும் நிலை ஏற்படுகின்றது. இதற்கு வயிற்று வலியைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மாத்திரைகளையோ ஊசிகளையோ வழங்குவதன் மூலமே சிகிச்சையளிக்கப்படும்.
மேலும், கர்ப்பப்பையில் கட்டிகள் உள்ள போது கர்ப்பிணி பெண்ணின் வயிறு சாதாரண அளவைவிட பெரிதாக தோற்றமளிக்கும். இதனால் 6 மாத கர்ப்ப காலத்தில் வயிறு 8--9 மாதங்கள் போல் தோற்றமளிக்கும். இதன்போது பெண் அசௌகரியங்களை அனுபவிப்பாள்.
அது மட்டுமல்ல, கர்ப்பப்பை கட்டிகள் உள்ளபோது கர்ப்பத்தில் உள்ள சிசுவின் நிலையும் மாறக்கூடும். அதாவது சிசுவானது குறுக்காகவோ அல்லது தலைமேல் கால் கீழாகவோ இருக்க கூடும்.
கர்ப்பப்பை கட்டிகள் உள்ள போது பிரசவமானது எவ்வாறு இருக்கும் ?
கர்ப்பப்பை கட்டிகள் அதாவது பைப்புரோயிட் கட்டிகள் இருக்கும் போது பிரசவமானது சிசேரியனாகவோ அல்லது சாதாரண சுகப் பிரசவமாகவோ இருக்கும் என்பது பலர் மனதிலும் ஒரு கேள்வியாகத்தான் இருக்கும். எனவே, பைப்புரோயிட் கட்டிகள் கர்ப்பப்பையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பிரசவ முறையை முடிவு செய்யலாம் என்பதை தெரிவிக்க வேண்டும். அதாவது கர்ப்பப்பையின் மேல்புறத்தில் பைப்புரோயிட் கட்டிகள் இருந்தால் சாதாரண சுகப்பிரசவத்துக்கு வாய்ப்புள்ளது. அது போல் பைப்புரோயிட் கட்டிகள் கர்ப்பப்பையின் கீழ்புறத்தில் இருந்தால் சாதாரண சுகப்பிரசவம் கடினம். சிசேரியன் பிரசவம் தான் முடியும்.
எனவே, பைப்புரோயிட் கட்டிகள் கர்ப்பப்பையில் இருக்கும் விதத்தை பொறுத்தே சிசேரியனா அல்லது சாதாரண சுகப் பிரசவமா எனத் தீர்மானிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் பைப்புரோயிட் கட்டிகள் உள்ளபோது சத்திர சிகிச்சை செய்து கட்டிகளை அகற்ற முடியுமா?
பைப்புரோயிட் கட்டிகள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது சத்திர சிகிச்சை செய்து கட்டிகளை அகற்ற முடியாது. பிரசவ நேரத்திலோ சிசேரியன் பிரசவத்திலும் கூட பைப்புரோயிட் கட்டிகள் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற முடியாது. அது ஆபத்தானது. எனவே கர்ப்பகால பிரசவம் முடிந்த பின்னர்தான் இது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM