இலங்கையில் தனது சேவைகளை சிறப்பாக வழங்குவதில் பத்து ஆண்டுகள் நிறைவை Uber இன்று எட்டியுள்ளது. மக்கள் போக்குவரத்து செய்யும் வழிமுறைகளை மாற்றியமைத்து, பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்கள் தமது வாழ்வாதாரங்களை முன்கொண்டு செல்ல இத்தளம் ஒரு தசாப்தகாலம் நீண்ட மகத்தான சேவையை வழங்கியுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில், இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, பாதுகாப்பான, நம்பிக்கைமிக்க, மற்றும் சிக்கனமாக போக்குவரத்து வசதிகளுடன், இலங்கையில் தேவைகளுக்கு ஏற்றவாறு உபயோகிக்கின்ற போக்குவரத்து சேவையாக பரிணமித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சத்துரங்க அபேசிங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். Uber ன் தெற்காசிய சந்தைகளுக்கான தலைமை அதிகாரி ஆகான்ஷா சிங் மற்றும் Uber Sri Lanka போக்குவரத்து சேவைப் பிரிவின் உள்நாட்டு முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன ஆகிய அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Public First என்ற சர்வதேச கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் திரட்டப்பட்டுள்ள 2024 இலங்கை பொருளாதார விளைவு அறிக்கையின் பிரகாரம், Uber மற்றும் Uber Eats ஆகியன இலங்கையில் தனியொரு ஆண்டில் மாத்திரம் பொருளாதார செயல்பாடுகள் மூலமாக ரூபா 160 பில்லியனைத் தோற்றுவித்துள்ளன. 2015ம் ஆண்டில் இலங்கையில் செயற்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, 1.15 பில்லியன் கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை Uber சவாரிகள் மேற்கொண்டுள்ளதுடன், இது பூமியிலிருந்து சந்திரனுக்கு செல்லும் தூரத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 3,000 மடங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தளத்தில் இணைந்து ஓட்டுனர்களாக செயல்படுவதன் மூலமாக 320,000 க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள் சம்பாதித்துள்ளனர். சுற்றுலாத் துறைக்கும் Uber உதவியுள்ளதுடன், சுற்றுலாப் பிரயாணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தங்குதடையின்றிச் செல்வதற்கு அவர்களுக்கு சேவைகளை வழங்கி, 700,000 க்கும் மேற்பட்ட விமான நிலைய சவாரிகளுக்கு இடமளித்துள்ளது. கடந்த ஆண்டில் மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தனது சேவைகளை மேலும் வலுப்படுத்தியுள்ள அது, தென் மற்றும் வட மாகாணங்களுக்கும் தனது சேவைகளை விஸ்தரித்து, தனது சேவைகளை நாடெங்கிலும் அதிகளவான சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றுள்ளது. நாடெங்கிலும் மக்கள் தமது தேவைகளின் அடிப்படையில் சவாரிகளை மேற்கொள்வதற்கு மிகவும் அபிமானம் பெற்ற சேவைத் தளங்களில் ஒன்றாக Uber பெரும் வளர்ச்சி கண்டுள்ளதுடன், பல்வேறுபட்ட கட்டணங்களில் சிக்கனமான, நம்பகமான, மற்றும் பாதுகாப்பான சவாரிகளை வழங்கிவருகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சத்துரங்க அபேசிங்க அவர்கள் கூறுகையில், “கடந்த ஒரு தசாப்த காலத்தில் மக்கள் தாம் செல்ல விரும்புகின்ற இடங்களுக்கு செல்வதற்கு உதவுவது மாத்திரமன்றி, கண்ணியத்துடனும், தமது வசதிக்கு ஏற்றவாறு நெகிழ்திறனுடனும் சம்பாதிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு இடமளித்து, இலங்கையின் மக்களின் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ள ஒன்றாக மாறியுள்ளது. மீட்பு நடவடிக்கை மற்றும் மீண்டெழுதல் ஆகிய சூழ்நிலைகளுக்கு நாடு முகங்கொடுத்துள்ள ஒரு காலகட்டத்தில் போக்குவரத்தை வலுப்படுத்தி, சுற்றுலாத்துறைக்கு ஆதரவளித்து, மற்றும் பொருளாதார வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதில் Uber போன்ற தளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையின் மீது Uber தொடர்ந்தும் காண்பித்து வரும் அர்ப்பணிப்பு மற்றும் நாடெங்கிலும் ஓட்டுனர்கள் மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டும் அதன் நோக்கம் ஆகியவற்றை நாம் வரவேற்கின்றோம்.”
Uber நிறுவனத்தின் தெற்காசிய சந்தைகளுக்கான தலைமை அதிகாரி ஆகான்ஷா சிங் அவர்கள் கூறுகையில்: “இலங்கையில் எமது சேவைகளை ஆரம்பித்து பத்து ஆண்டுகள் நிறைவை நாம் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், நாடெங்கிலும் நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை மாற்றியமைத்து, பொருளாதார வாய்ப்புக்களுக்கு உதவுவதில் Uber ஆற்றியுள்ள பங்களிப்பையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். சவாரி செல்கின்றவர்கள், ஓட்டுனர் கூட்டாளர்கள், மற்றும் உள்ளூர் சமூகங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு இச்சாதனை சான்று பகருகின்றது. எமது வளர்ச்சி வரலாற்றில் முக்கியமானதொரு பாகமாக இலங்கை காணப்படுவதுடன், எமது சேவைகள் கிடைக்கப்பெறுவதை மேலும் விரிவுபடுத்தி, சிக்கனமான மற்றும் நம்பகமான போக்குவரத்து தீர்வுகளை வழங்கி, சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும் தெரிவுக்கான தளமாக தொடர்ந்தும் சிறப்பாகப் பயணிப்பதில் எதிர்வரும் தசாப்தத்தில் நாம் கவனம் செலுத்துவோம். எதிர்வரும் ஆண்டுகளில் கூட்டாண்மைகள் மீது முதலீடுகளை மேற்கொண்டு, இலங்கை மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைப்போம்.”
ஓட்டுனர்களின் பங்களிப்புக்களுக்கான அவர்களுக்கு அங்கீகாரமளித்தல்
இந்த சாதனை இலக்கினைக் குறிக்கும் வகையில், ஹட்டன் நஷனல் வங்கியின் கூட்டாண்மையுடன், இலங்கையில் ஓட்டுனர்களுக்கான இலவச நிதியியல் அறிவு மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்வது குறித்து Uber அறிவித்துள்ளதுடன், முதற்கட்டமாக 1,000 ஓட்டுனர்கள் இதில் உள்வாங்கப்படவுள்ளனர். தனிப்பட்ட நிதியியல் வரவு செலவைத் திட்டமிடல் மற்றும் நிர்வகிப்பதற்கு அத்தியாவசியமான திறன்களை ஓட்டுனர்கள் மத்தியில் வளர்த்து, அவர்கள் மகத்தான அளவில் ஸ்திரத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையில், முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பாக கிடைக்கப்பெறுகின்ற தெரிவுகள் குறித்த விளக்கங்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தினூடாக அவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கையில் போக்குவரத்து சேவைகளை திறம்பட வழங்கி, தொழில்நேர்த்தி, மற்றும் தொடர்ச்சியான மகத்துவத்தைக் காண்பித்துள்ள 10 மிகச் சிறந்த ஓட்டுனர்களுக்கு Uber அங்கீகாரமளித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பை வளர்க்கும் வகையில் நீண்ட கால சேவையை வழங்கி, மிகவும் ஈடுபாடுகளைப் பேணியுள்ள ஓட்டுனர்களைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Uber Sri Lanka நிறுவனத்தின் போக்குவரத்து சேவைப் பிரிவின் உள்நாட்டு முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன அவர்கள் கூறுகையில்: “இலங்கையின் போக்குவரத்து வலையமைப்பின் முதுகெலும்பாக ஓட்டுனர்கள் காணப்படுவதுடன், அவர்களுடைய வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது Uber ன் பணிநோக்கின் மையமாகக் காணப்படுகின்றது. நிதியியல் அறிவை மேம்படுத்தும் முயற்சி மற்றும் மிகச் சிறந்த ஓட்டுனர்களுக்கான அங்கீகாரம் என்பவை, ஓட்டுனர்கள் நீண்ட கால அடிப்படையில் வெற்றி காண்பதற்கு தயாராக்கப்பட்டு, தம்முடைய வாழ்வின் இலட்சியங்களை எட்டுவதில் ஒரு படி முன்னேறுவதை உறுதி செய்வதில் எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. ஹட்டன் நஷனல் வங்கி போன்ற நம்பிக்கைமிக்க நாமமொன்றுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்வதுடன், இன்னும் அதிக எண்ணிக்கையில் ஓட்டுனர்களை உள்ளடக்கும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுபடுத்த முடியும் என நம்புகின்றோம்.”
ஹட்டன் நஷனல் வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும்/தனிநபர் வங்கிச்சேவைக்கான தலைமை அதிகாரியுமான காஞ்சன கருணாகம அவர்கள் கூறுகையில்: “இலங்கையில் தனது சேவைகளை வழங்குவதில் 10 ஆண்டுகளை எட்டியுள்ள Uber நிறுவனத்துக்கு எமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், ஓட்டுனர்கள் தமது எதிர்காலத்தை வளப்படுத்த நிதியை சிறந்த முறையில் திட்டமிடத் தேவையான திறன்களை அவர்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்காக கைகோர்ப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். நடைமுறை ரீதியான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பின் மூலமாகவே நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து உள்ளடக்கும் சௌற்பாடு ஆரம்பிப்பதாக ஹட்டன் நஷனல் வங்கி நம்புவதுடன், மக்கள் திறன்மிக்க வழியில் சேமித்து தமது பணத்தை தன்னம்பிக்கையுடன் நிர்வகித்து, மற்றும் நீண்ட கால பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்ற அறிவைப் பகிர்ந்து கொள்வதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.”
சமூகத்திற்கு ஆதரவளித்தல்
டித்வா புயலின் அழிவிலிருந்து இலங்கை மீண்டெழுந்து வருகின்ற நிலையில், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ரூபா 65 மில்லியன் தொகை நன்கொடையை வழங்குவதாக Uber உறுதியளித்துள்ளது. உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகை, மற்றும் பராமரிப்பு பொதிகள் போன்றவற்றுக்கான நிதி, செஞ்சிலுவைச் சங்க அணிகளுக்கு இலவச Uber சவாரிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று, விநியோகிப்பதற்காக Uber Eats மூலமான உதவி ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் தாம் பங்களிக்கின்ற விரும்புகின்ற உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எவ்வித கட்டணங்களுமின்றி நேரடியாக நகர மண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு அமையத்திற்கு Uber app மூலமாக அனுப்பி வைக்க அவர்களுக்கு இடமளித்து, பொது நன்கொடை முயற்சியொன்றை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபையுடன் Uber கைகோர்த்துள்ளது.
சமூகத்திற்கு ஆதரவளிப்பதில் செஞ்சிலுவைச் சங்கத்துடன் Uber தொடர்ந்தும் பேணி வருகின்ற கூட்டாண்மையின் கீழ் மற்றுமொரு முயற்சியாக இந்த சமீபத்தைய முயற்சி காணப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக ரூபா 60 மில்லியன் தொகையை Uber நன்கொடையாக வழங்கியிருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலப்பகுதியில், முன்கள சுகாதாரத் துறை பணியாளர்கள், வயோதிபர்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்கு சென்று வருவதற்காக 50,000 இலவச சவாரிகளையும் Uber நன்கொடையாக வழங்கியிருந்தது.
இலங்கையில் அடுத்த தசாப்த கால செயற்பாட்டில் Uber காலடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி, சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களை வலுப்படுத்தி, தேவைகளின் போது சமூகங்களுக்கு உறுதுணையாந செயற்பட்டு, ஒரு நேரத்தில் ஒரு பயணத்துடன், இலங்கையை தொடர்ந்தும் முன்னேற்றுவதில் இந்நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM