ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மக்களை மீள்குடியேற்றும்போது முறையான மேற்பார்வையுடன் செயல்படுவது அனைவரின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அனைத்து மறுசீரமைப்புகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் அந்த நிதி ஒதுக்கீடுகளை மீளத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அன்றாட இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகளில் எந்தப் பற்றாக்குறையும் கிடையாது என்றும் இந்த அவசரகால நிலையில் வரம்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து நிறுவனங்களும் தங்கள் பொறுப்புகளை நன்கு ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதே அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் இயல்பு நிலையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் திங்கட்கிழமை (08) ஊவா மாகாண நுலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் 19,133 குடும்பங்களைச் சேர்ந்த 64,140 பேர் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 7,703 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீதிகளை மீளமைப்பது, மின்சாரம், நீர் வழங்கல், தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்புவது மற்றும் விவசாயம், கால்நடைத் துறை, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி தனித்தனியாக கேட்டறிந்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி சபை வீதிகள் எனப் பிரித்துப் பார்க்காமல் அனைத்து வீதிகளின் புனரமைப்பு பணிகளையும் சமாந்தரமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாவிட்டால் தேவையான நிதியைக் கோருமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

மாவட்டத்தில் நிரந்தர மறுசீரமைப்பு அவசியமான அனைத்து வீதிகளின் மதிப்பீட்டையும் தயாரித்து சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். ஜனவரி மாதத்திற்குள் இந்தப் பணிகளைத் தொடங்குவதற்கான நிதியை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனர்த்தம் காரணமாக துண்டிக்கப்பட்ட 90% மாவட்ட மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சியதை துரிதமாக மீளமைத்து வருவதாகவும் அதேவேளை தேவைக்கேற்ப மாவட்டத்தில் நீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 15,000 ரூபா கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பதுளை மாவட்டத்தில் 6,711 ஏக்கர் விவசாயக் காணிகள் அனர்த்தத்தால் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையையும் விவசாய நிலங்களின் அளவையும் மதிப்பீடு செய்து உடனடியாக இழப்பீடு வழங்கி மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
பெரும் போகத்தில் பயிற்செய்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக விவசாய நிலங்களுக்கு தற்காலிக நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அனர்த்தத்தினால் சேதமடைந்த விகாரைகள் மற்றும் மதத் தலங்களை சுத்திகரிப்பு செய்வதற்காக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அது தொடர்பில் இந்த வாரம் அமைச்சரவை முடிவு எடுக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அழிந்த மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குவது மற்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்வது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
பராமரிப்பு முகாம்களில் வசிக்கும் மக்களின் மனநல மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த அனைத்துப் பணிகளிலும் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முப்படைகள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான சமந்த வித்யாரத்ன, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் ஊவா மாகாண ஆளுநருமான சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தகம், வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எச்.எம். தினிந்து சமன் ஹென்னாயக்க, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் குமார, ரவீந்திர பண்டார, சுதத் பலகல்ல, கிட்னன் செல்வராஜ், அம்பிகா சாமிவேல், அஜந்த கம்மெத்தகே, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள், பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM