கூட்டணி அரசியலை மையமாகக்கொண்ட தமிழ்நாட்டு தேர்தல்கள்

08 Dec, 2025 | 10:37 AM
image

ஜெயா மேனன்

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணிகளை அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் நெருக்கியடித்துக் கொண்டு போட்டி போடுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் சமூகநீதி, பிராந்திய சுயாட்சி மற்றும் தமிழ்ப்பெருமை ஆகியவற்றில் வேரூன்றிய திராவிட கோட்பாடுகள் பற்றி பேசுகின்ற அதேவேளை, அவற்றின் கடந்தகாலச் செயற்பாடுகள் அவை தங்களது பங்காளிக் கட்சிகளில் எந்தளவுக்கு தங்கியிருந்தன என்பதைக் காட்டுகிறது.

2026 தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மிகப்பெரிய முனையாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி இருக்கப் போகிறது. 2021 ஆம் ஆண்டில் பெரிய கூட்டணியின் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இரண்டாவது தடவையாகவும் பதவிக்குவரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பிளவுபட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் அவற்றின்  கூட்டணிகள் குறித்து இன்னமும் அறிவிக்கவில்லை.

அண்ணா தி.மு.க. வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இவ்விரு கட்சிகளையும் தனது பக்கம் இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக வெற்றிக் கழகத்துடன் அண்ணா தி.மு.க. கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இலாலாத நிலையில்,  நடிகர் விஜய் தலைமையிலான அந்த புதிய கட்சி  ஒரு சில சிறிய  பங்காளி கட்சிகளுடன் கூட்டணியை அமைக்கக் கூடும்.

" பலம்பொருந்திய கூட்டணிகள் கடந்தகாரத்தில் வெற்றியைக் கொண்டு வந்திருக்கின்றன. அவை எப்போதுமே வெற்றியைக் கொண்டு வரும்" என்று தி.மு.க. பேச்சாளரான ரி.கே.எஸ். இளங்கோவன் கூறுகிறார்.

1967 ஆம் ஆண்டில் தி.மு.க. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. சி.என். அண்ணாத்துரையின் வழிகாட்டலில் தி.மு.க. தலைமையிலான ஒரு  கூட்டணி முதல்  தடவையாக முக்கியமான அரசியல் சக்தியாக வெளிக்கிளம்பியது. ஐந்து தேசியக் கட்சிகள் அந்த கூட்டணியை ஆதரித்தன. அண்ணாவின் ஆசான் ஈ.வெ. இராமசாமி பெரியாரின்  திராவிடர் கழகமும் எம். பக்தவத்சலம் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஆதரவளித்தது. தமிழ்த் தரையுலகத்துடனான தி.மு.க.வின் நீண்டகால உறவு காங்கிரஸின் கொள்கைகளுக்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து அதன் சொந்த அரசியல் கோட்பாடுகளைப் பிரபல்யப்படுத்தப்  பெரிதும் உதவியது.

தேர்தல் நடப்பதற்கு சில வாரங்கள் முன்னதாக ஒரு கொலை முயற்சி தமிழ்நாட்டை உலக்கியது.எம்.ஜி. ஆரை  அவரது செனனையில் உள்ள வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர். ராதா துப்பாக்கியில் சுட்டார். அவரது ரசிகர்கள் பெரும் கலவரத்தில் இறங்கினர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி சட்டசபையின் 234 ஆசனங்களில் 179 ஆசனங்களைக் கைப்பற்றியது ; காங்கிரஸுக்கு 51 ஆசனங்கள் கிடைத்தன. எம்.ஜி.ஆர் மீதான துப்பாக்கி வேட்டா அல்லது கூட்டணியின் பலமா தி.மு.க.வின் வெற்றிக்கு உதவியது? இதுவரை உண்மை தெரியவில்லை.

" 1967 ஆம் ஆண்டில் முற்றிலும் வேறுபட்ட வகையான கூட்டணி அரசியல் ஒன்றை முயற்சித்துப்பார்ப்பதே அண்ணாவின் தந்திரோபாயமாக இருந்தது. அவர் அதை தேர்தல் உடன்பாடு என்று அழைத்தார்" என்று கூறுகிறார் திராவிடர் கழகத் தலைவர் கே. வீரமணி. " தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் பொது எதிரியாக அன்று காங்கிரஸ் விளங்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகள் அந்த கூட்டணியில் அங்கம் வகித்தன.  காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இலக்கு சகலரையும் ஐக்கியப்படுத்தியது. தி.மு.க. கூட்டணியின் அடிப்படையாக ஒரு  கோட்பாடுதான் இருந்தது. அது தொடருகிறது"  என்று வீரமணி கூறுகிறார்.

1971 ஆம் ஆண்டில் தி.மு.க. இந்திய தேசிய காங்காரஸ் ( இந்திரா) உட்பட ஏழு கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஒன்றை அமைத்தது. தி.மு.க.வுடனான உடன்படிக்கை ஒன்றின் பிரகாரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. சட்டசபையில் 205 ஆசனங்களைக் கைப்பற்றி கூட்டணி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. 197 சடடசபை தேர்தலில்  எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க. முதற்தடவையாக நான்கு கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஒன்றை அமைத்து 144 ஆசனங்களைக் கைப்பற்றியது. தனியாகப் போட்டியிட்ட தி.மு க.வுக்கு 48 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன.

1980 சடடசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. தலைமையிலான ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டணி 162 ஆசனங்களைக் கைப்பற்றிய அதேவேளை காங்கிரஸ் -- தி.மு.க. கூட்டணி.69 ஆசனங்களில் வெற்றி பெற்றது. 1984 தேர்தலில் அண்ணா தி.மு.க. -  காங்கிரஸ் கூட்டணி 195 ஆசனங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கட்டணிக்கு வெறுமனே 34 ஆசனங்களே கிடைத்தன. 1989 ஆம் ஆண்டில் மூன்று கட்சிகளைக் கொண்ட தி.மு.க. கூட்டணி ( ஜெயலலிதா அணியாகவும் ஜானகி இராமச்சந்திரன் அணியாகவும் பிளவுபட்டு நின்ற அண்ணா தி.மு க.வை தோற்கடித்து ) அதிகாரத்துக்கு வந்தது.

1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொலையை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் அண்ணா தி.மு.க.வும் காங்கிரஸும் மகத்தான வெற்றயைப் பெற்றன. ஜெயலலிதாவுக்கு அது முதலாவது முக்கியமான  வெற்றி. 1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தேர்தல் பிரசாரங்களை ஆக்கிரமித்த காரணத்தினால் அலை மறுபக்கமாக திரும்பியது. ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ்நாடு மாநில காங்கிரஸுடன் கூட்டுச்சேர்ந்து  தி.மு. க. வெற்றிபெற்றது.

2001 ஆம் ஆண்டில் ஒன்பது கட்சிகளைக் கொண்ட அண்ணா தி.மு.க. கூட்டணி தி.மு.க. -- காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்தது ; ஐந்து வருடங்களுக்கு பிறகு காங்கிரஸை தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2011 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உட்பட 11 கட்சிகளைக் கொண்ட கூட்டணியை அமைத்து அண்ணா தி.மு.க.வெற்றி  பெற்றது. 2016 ஆம் ஆண்டிலும் அண்ணா தி.மு.க.வே வெற்றி பெற்றது.

ஆனால், அந்த வருடம் அமைக்கும் தந்திரோபாயத்தை கைவிட்டு அண்ணா தி. மு.க. 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டது. அதற்கு 136 ஆசனங்கள் கிடைத்தன. எம்.ஜி.ஆருக்கு பிறகு அந்த கட்சி அடுத்தடுத்து இரு தடவைகள் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பமாக அது அமைந்தது. 2 ஜி ஊழலும்  தி.மு.க. வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் ஒழுங்கான ஒருங்கிணைப்பு இல்லாதமையும் அவர்களின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க., தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக்கூட்டணி என்ற மூன்றாவது அணியொன்றும் அந்த தேர்தலில் போட்டியிட்டது. 

" அங்கத்துவக்  கட்சிகளுக்கு இடையில் இருக்கக்கூடிய புரிந்துணர்வும் நெருக்கமான உறவு முறையுமே கூட்டணி ஒன்றை பலம் பொருந்தியதாக வைத்திருக்கும் " என்று தி மு.க. பேச்சாளர் மனு சண்முகசுந்தரம் கூறுகிறார். " இந்தியா கூட்டணி (INDIA bloc) 2017 ஆம் ஆண்டில் இருந்து பல மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. கட்சிகளுக்கு இடையில் பொதுவான கோட்பாட்டு பிணைப்பு இருப்பதனால்  அவற்றின் தொண்டர்கள் மத்தியில் ஒத்துழைப்பு இருக்கிறது.  எதிர்க்கட்சிகளின் கூட்டணி தோழமையினால் அல்ல, நிர்ப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது. தோற்கடிக்கமுடியாத கூட்டணிக் கணிதமே தற்போதைய தி.மு.க. அரசாங்கத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக விளங்குகிறது " என்று சண்முகசுந்தரம் கூறினார்.

களத்தில் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுக்கக்கூடிய வல்லமையையும் சாதிப்பலம் மற்றும் நிதிவசதிகளை கூட்டணிகள் கொண்டு வருகின்றன.  ஆனால், 2026 தேர்தலில் கூட்டணிக் கணிதம் மாத்திரம் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு போதுமானதா?  தமிழக வெற்றிக்கழகம் பாரதூரமான சவாலாக வெளிக்கிளம்பக்கூடும் என்று விஜயைச் சார்ந்தோர் கூறுகிறார்கள்.

" பலம்பொருந்திய கூட்டணிகள் வெற்றிக்கான விதிமுறையாக அமைவதாக இருந்தால், 2016 ஆம் ஆண்டில் அண்ணா தி.மு க. தனியாகப் போட்டியிட்டு எவ்வாறு வெற்றி பெற்றது?" என்று பாரதிய ஜனதாவின் பிரதான பேச்சாளரான நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்புகிறார். 

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் விஜய் சேர்ந்துகொள்வாராக இருந்தால் அது பாரிய வெற்றியைப் பெறும் என்று அவர் கூறுகிறார். 

மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதால் விஜயுடன் தாங்கள் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பை அவராகவே மூடிவிட்டதாக அண்ணா தி.மு.க. தலைவர்கள் கூறுகிறார்கள். செங்கோட்டையனை தொடர்ந்து டி.டி.வி. தினகரனும் ஓ. பன்னீர்ச்செல்வமும் விஜயுடன் சேர்ந்து விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அண்ணா தி.மு க.வுடனான கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும் என்று பாரதிய ஜனதா நம்பிக்கையுடன் இருக்கிறது. " அண்ணா தி.மு.க. தான் தமிழ்நாட்டில் முதலாவது பெரிய கட்சி. இரண்டாவதாகவே தி.மு.க. இருக்கிறது. மூன்றாவது பெரிய கட்சி பாரதிய ஜனதா விளங்குகிறது. அதனால் முதலாவது  கட்சியும் மூன்றாவது கட்சியும் சேரும்போது கூட்டணி மிகவும்  பலம்பொருந்தியதாக இருக்கும். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை விடவும் குறைவான வாக்கு வங்கிகளையே தி.மு க. வின் சகல நேசக் கட்சிகளும் கொண்டிருக்கின்றன. அத்துடன் அரசாங்கத்தின் இதுவரையான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் இருக்கிறது"  என்று நாராயணன் கூறுகிறார்.

அரசாங்கம் தொடர்பில் மக்களின் அதிருப்தியும் விஜயின் ஆதரவு அதிகரிப்பும்  எதிர்க் கட்சிகளுக்கு  அனுகூலமாக அமையலாம். ஆனால்,  எதிரணிக்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது தி.மு.க.வுக்கு பெருமளவுக்கு வாய்ப்பாக அமையவும் முடியும்.

(ரைம்ஸ் ஒவ் இந்தியா) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right