நியூஸிலாந்துடனான டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது மே. தீவுகள்

06 Dec, 2025 | 05:25 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளன்று ஜஸ்டின் க்றீவ்ஸ் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் அப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 457 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இதன் மூலம் தனது 6ஆவது டெஸ்டில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான இன்று மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு மேலும் 319 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்கள்  வீழ்த்தப்படவிருந்தது.

இந் நிலையில் இந்தப் போட்டியில் பெரும்பாலும் நியூஸிலாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 388 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்ட்றிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைவதை உறுதிசெய்தார்.

  மேலும் நியூஸிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வெளிநாட்டவர் என்ற பெருமையை ஜஸ்டின் க்றீவ்ஸ் பெற்றுக்கொண்டார்.  

அவர் தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணியினரும் தீர்மானித்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களிலிருந்து ஜோடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ஷாய் ஹோப் 5 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 234 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 140 ஓட்டங்களைப் பெற்று இன்று ஆட்டம் இழந்தார். (268 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 277 ஓட்டங்களாக இருந்தபோது டெவின் இம்லக் (4) ஆட்டம் இழந்ததும் நியூஸிலாந்து வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கத் தொடங்கியது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ், கெமர் ரோச் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைவதைத் தவிர்த்தனர்.

இந்த இணைப்பாட்டமானது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் பதிவான அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

அத்துடன் கடைசி இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் 385 ஓட்டங்களைக் குவித்தது.

இது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.  

இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 1973இல் 4ஆவது விக்கெட் வீழ்ந்த  பின்னர் நியூஸிலாந்தினால் பெறப்பட்ட 310 ஓட்டங்களே கடைசி இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய சாதனையாகும்.

மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் கெமர் ரோச் 233 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (கேன் வில்லியம்சன் 52, மைக்கல் ப்றேஸ்வெல் 47, ஒஜே ஷீல்ட்ஸ் 34 - 2 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 35 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 44 - 2 விக்., கெமர் ரோச் 45 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1வது இன்: சகலரும் ஆட்டம்  இழந்து  167 (ஷாய் ஹோப் 56, டேஜ்நரின் சந்தர்போல் 52, ஜேக்கப் டபி 34 - 5 விக்., மெட் ஹென்றி 43 - 3 விக்., ஸக் போக்ஸ் 32 - 2 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: 466 - 8 விக். டிக்ளயார்ட் (ரச்சின் ரவிந்த்ரா 176, டொம் லெதம் 145, டெவன் கொன்வே 37, மைக்கல் ப்றேஸ்வெல் 24, வில் யங் 23, கெமர் ரோச் 78 - 5 விக்., ஒஜே ஷீல்ட்ஸ் 74 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி இலக்கு 531 ஓட்டங்கள் - 2ஆவது இன்னிங்ஸ் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது 457 - 6 விக். (ஜஸ்டின் க்றீவ்ஸ் 202 ஆ.இ., ஷாய் ஹோப் 140, கெமர் ரோச் 53 ஆ.இ., ஜேக்கப் டபி 122 - 3 விக்.)

ஆட்டநாயகன்: ஜஸ்டின் க்றீவ்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56