(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
அனர்த்த நிலைக்கு முகம்கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கான நிதியம் இருக்கும் நிலையில், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நிதியம் ஒன்றை அமைத்திருக்கிறார். அந்த நிதியத்துக்கு இருக்கும் சட்ட அங்கிகாரம் என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால், அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது 2005ஆம் ஆண்டு 13ஆம் இலக்க இலங்கை பேரிடர் சட்டம் அமுலில் இருக்கிறது.
அந்த சட்டத்திலே இந்த பிரச்சினையை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது, எவ்வாறு பணம் சேகரிப்பது, பணம் கிடைப்பது எவ்வாறு போன்ற அனைத்து விடயங்களும் இருக்கின்றன.
விசேடமாக மீள கட்டியெழுப்ப, இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கான நிதியம் என இந்த சட்டத்தில் இருக்கும்போது ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, இந்த சட்டத்துக்கு அப்பால் சென்று அவர் ஒரு நிதியத்தை அமைத்துள்ளார்.
அந்த நிதியத்துக்கு ஜனாதிபதி நியமித்துள்ள உறுப்பினர்களை பார்க்கும்போது, அதில் ஜனாதிபதியின் ஆலாேசகர்கள், அவருடன் இருக்கும் வியாபாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனாதிபதியின் இந்த நிதியத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில், தற்போதைய இடர்நிலை தொடர்பான விசேட நிபுணர்கள் இருக்கிறார்களா?
அந்த குழுவில் வைத்தியர்கள் இல்லை. பொறியியலாளர்கள் இல்லை, குறைந்தபட்சம் கணக்காளர் ஒருவர் இருக்கவேண்டும். ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவராவது இருக்க வேண்டும். அவ்வாறான ஒருவரும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் ஒருவராவது இருக்கும் என்று பார்த்தால், அப்படியான ஒருவரும் இல்லை. பெண்கள் பிரதிநிதித்துவமும் இல்லை.
அப்படியானால் ஜனாதிபதி இந்த நிதியத்துக்கு நியமித்திருப்பவர்களில், வாகனம் இறக்குமதி செய்து, அதன் கொள்வனவை மாற்றியமைத்த குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறும் வியாபாரிகள் சிலரும் இருக்கின்றனர்.
மன்னாரில் காற்றாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து, சுற்றாடலை மாசுபடுத்திய குற்றச்சாட்டுக்குள்ளாகியவர்களும் இந்த குழுவில் இருக்கின்றனர்.
ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக இருக்கும் தம்மிக்க பெரேரா மாத்திரமே இந்த குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. அதனால் ஜனாதிபதியின் இந்த நிதியத்துக்கு இருக்கும் சட்ட அங்கிகாரம் தொடர்பில் எமக்கு பிரச்சினை இருக்கிறது.
மேலும் ஹெல்பின் அம்பந்தோட்டைக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அதேபோன்று கொவிட் காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ் இடுகம என நிதியம் ஒன்றை அமைத்தார்.
அந்த நிதியத்துக்கு என்ன நடந்தது. அதில் தற்போது பணம் இருக்கிறதா இல்லையா? அதேபோன்று நாங்கள் யாரும் அறியாத நிதியம் ஒன்றும் இருக்கிறது. அதுதான் சுனாமி காலத்தில் அமைக்கப்பட்ட சிவப்பு நச்சத்திர காரர்களின் சுனாமி நிதியம். அந்த நிதியத்துக்கு என்ன நடந்தது.? அதனால் நிதியங்கள் தொடர்பில் எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது.
எனவே வேறு நிதியங்களை அமைக்காமல், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம் நிதியம் அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையில் நிவாரண நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்தினார், இந்த சட்டத்தை பயன்படுத்தி, யாரையும் பழிவாங்கும் செயலை மேற்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்திரந்தார்.
ஆனால் அரசாங்கத்தின் அமைச்சர்கள், சமூக வலைத்தலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலாேசனை வழங்குகிறார்கள். இது மிகவும் பயங்கரமான நிலையாகும்.
அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்ததை, தற்போது அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அவ்வாறான ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சமூக ஊடகங்களை அடக்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.
அதனால் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தில் இருந்து மீட்பதற்கு, ஜனாதிபதி பொதுவான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதில் எதிர்க்கட்சியாகிய நாங்களும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM