இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ' நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்ற நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

டீஸரை வெளியிட்டு நடிகர் ஆர்யா பேசும் போது,

" நையப்புடை டீஸர் பார்த்து அசந்து விட்டேன். எஸ்.ஏ.சந்திரசேகரன்  சார் ஒரு இயக்குநராக தயாரிப்பாளராக, எவ்வளவோ சாதித்து விட்டார். அவர் சாதிக்க வேண்டியது என்று எதுவுமே பாக்கியில்லை. அவர் என்னை இந்த விழாவுக்கு அழைத்தபோது படம் பற்றி, கதை பற்றி,தயாரிப்பாளர் பற்றி எல்லாம் சரியாக அறிமுகப்படுத்தி விளக்கிப்  பேசி விட்டுத்தான் அழைத்தார். அவர் வரச் சொன்னால் வரப் போகிறேன். ஆனால் அவர் அழைத்த விதம் அவ்வளவு முறையாக இருந்தது. எப்போதும் அவரது உற்சாகம் என்னை ஆச்சரியப்பட வைக்கும். டீஸர் பார்க்கும்போது எஸ்.ஏ.சி சார் அழகாக சண்டை போட்டுள்ளார். பார்த்து அசந்து விட்டேன். 

எனக்கெல்லாம் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது எப்படா இந்த ஃபைட் முடியும் என்று நினைப்பேன். அந்த அளவுக்கு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது எரிச்சலாக இருக்கும். ஆனால் அவர் இதில் அவ்வளவு உற்சாகமாக சண்டை போட்டு இருக்கிறார். பாராட்டுக்கள். 

இவ்வளவு சாதித்து இருக்கிறார் இந்த வயதில் இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சிலர் நினைக்கலாம். அவரிடம் அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வம், ஈடுபாடு இருக்கிறது. அதனால் தான் இப்படிச் செய்ய முடிகிறது. இவர் வயதில் நான் என்றால் சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருப்பேன் வீட்டில் கேட்பார்கள் இவன் ஏன் பைத்தியக்காரன் மாதிரி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்று. எனக்கு பிடித்தது, என்கூட இருப்பதுதான் வரும். இவர் மகன் ஒரு சூப்பர் ஸ்டார், இதற்குமேல் என்ன  வேண்டும் என்று பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். இந்த வயதில் ஏன் இப்படி என்று நினைப்பார்கள். ஆனால்  விமர்சனங்களைப்பற்றிக் கவலைப்படாமல்  இருப்பார். அவரால் உழைக்காமல் இருக்க முடியாது. 

பா.விஜய். ஆல்ரவுண்டர் எல்லாமும் செய்பவர். எனக்காக நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் சினிமாவைக் காதலிப்பவர். அவரும் இதில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்." என்றார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும் போது," இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். " என்றார்.

எடிட்டர் டான்பாஸ்கோ பேசும் போது,"  எஸ்.ஏ.சி கூடவே இருந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர்  கயிறு இல்லாமல் ஸ்டண்ட் செய்துள்ளார்.'என்றார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும் போது," எனக்கு இந்தப்படத்தில் எல்லாக் காட்சியும் பிடிக்கும். ஒரு காட்சி மட்டும் பிடிக்காது. அது நான் எஸ்.ஏ.சி மாமாவை அடிக்கும் காட்சி. அதிலும் நடிக்க நான் மறுத்தேன். ஒழுங்கா உதைக்கலைன்னா நான் உதைப்பேன் என்று மிரட்டி நடிக்க வைத்தார்.'என்றார்.

படத்தின் இயக்குநர் விஜயகிரண் பேசும் போது," எஸ்.ஏ.சி சார், பா.விஜய் சார் என இரண்டு பெரிய மனிதர்களை வைத்து இயக்கியது பெரிய விஷயம். வாய்ப்பு கொடுத்த தாணு சாருக்கு நன்றி.' என்றார்.

'ரஜினி முருகன்'  இயக்குநர் பொன்ராம் பேசும்போது," நான் எஸ்.ஏ.சி சாரிடம் உதவியாளராக இருந்த போது அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அதில் வலி இருக்காது. அப்பா, அம்மா அடிப்பது போல்தான் இருக்கும்.' என்றார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, 'நிலாவே வா' எனக்கு 3 வது படம். அதை எடுக்கும் முன்பு எஸ்.ஏ.சி சார் கேட்டார் எத்தனை நாளில் எடுப்பாய்? எத்தனை ரோலில் எடுப்பாய்? என்றார். 45 நாள் 50 ரோல் என்றேன். ஒரு நாள் அதிகமானாலும் அடிப்பேன் என்றார். அப்படி எடுத்த படம் அது.'என்றார்.

கவிஞர் பா.விஜய் பேசும் போது, 'நான் ஒரு 'நறுக்' கவிதை எழுதினேன். 'உழைப்பு உன் அத்தியாயத்தில் முதல் வரியாக இருந்தால் உயரம் உன் வாழ்க்கையில் முகவரியாக இருக்கும்' என்று. அதற்கு முழு உதாரணமாக இருப்பவர் எஸ்.ஏ.சி சார் அவர் எனக்கு அப்பா மாதிரி.'என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி  எஸ்.தாணு பேசும் போது, "நினைத்ததைவிட 'நையப்புடை' படம் நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவை, சண்டை என எஸ்.ஏ.சி யின் பலமுகங்கள் படத்தில் வெளிப்பட்டுள்ளன. படம் பார்த்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். 'நையப்புடை' பெரிய படமாக வரும் என்றேன்.  வட இந்தியாவில் அமிதாப் பச்சன் போல தென் இந்தியாவில் நல்ல நடிகராக  எஸ்.ஏ.சி  வருவார்" என்றார்.

முன்னதாக லிடியோன் நாதஸ்வரம் என்கிற 9 வயது சிறுவன் டிரம், பியானோ வாசித்துக் காட்டினான். அதைப் இரசித்து விட்டுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், 'இவனுக்கு முன்பாக நாம் எல்லாம் ஒன்று மில்லை.' என்று கூறிப் பாராட்டினார்.

தொடர்ந்து 'நையப்புடை' படத்தின் அனுபவம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்பேசும் போது," எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன்.  படப்பிடிப்புக்கு மும்பை போகும் போது பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கியிருப்பேன். ஸ்டார் ஓட்டலில் நாம் சமைக்க அனுமதி இல்லை. எனவே பாத் ரூமில் உள்ள ப்ளக் பாயிண்டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார். யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். 

உண்மையாகக் காதலித்தால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் உண்மையாகக் காதலிப்பவர்கள் இருப்பதில்லை. மனைவியைப் போலவே  நான் சினிமாவையும்  நிஜமாகவே காதலிக்கிறேன். என்றும், காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி வரும். அதனால் தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வருகிறது.

எனக்கு உழைக்க மட்டுமே தெரியும். என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்' மாடுமாதிரி உழைக்கிறானே' என்பார்கள். நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு 2 வரி கவிதை கூட எழுதத் தெரியாது. 4வரி வசனம்கூட எழுதத் தெரியாது. இலக்கியம் படித்ததில்லை. இருந்தாலும் உழைப்பேன்.

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள். அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. இந்த இயக்குநருக்கு 19 வயது தான் ஆகிறது. இந்தப்பையன் இயக்குநர் என்று  படம் ஆரம்பித்ததும் 2 நாளில் ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இது சரிப்பட்டு வராது படத்தை நிறுத்தி விடலாம் என்றேன். தாணு தான்  சமாதானப்படுத்தினார் 4 வது நாள் எடிட் செய்து எடுத்ததைக் காட்டியதைப் பார்த்தவுடன் தான்  நம்பிக்கை வந்தது. இன்றைய இளைஞர்கள் அவர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது.    

பா.விஜய்யை என் இன்னொரு மகனாகவே பார்க்கிறேன். படத்தின் கதை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தாலும் அவர், பெருந்தன்மையுடன் 'ஜெயிக்கிற படத்தில் நான் இருக்கிறேன்' என்றார்.  இப்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனு{டன் நடிக்கிறேன். தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன். இன்றைய இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. ' என்றார்.   

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவன், தயாரிப்பாளர்கள்  பி,டி .செல்வகுமார், காஸ்மோ சிவா ஆகியோரும் பேசினார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்