ஆர்.ராம்
இலங்கை வரலாற்றை உலுக்கிய தித்வா சூறாவளி மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவு, நாடு முழுவதையும் நீரில் மூழ்கடித்து, பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிகமோசமான அனர்த்தத்தின் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்ளும் முகமாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஒரு அசைக்க முடியாத உறுதியுடன் கூடிய தேசிய மீட்பு மற்றும் மீள்கட்டுமானப் பணியை ஆரம்பித்துள்ளது.
இந்தச் சவாலானது, வெறும் நிவாரணப் பணியாக மட்டுமன்றி, 'பழைய நிலைக்கு அல்லது முன்பை விடச் சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும்' (Build Back Better) ஒரு கூட்டுப் பிரகடனமாகவும், எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும் மாறியுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்க, நாடு எதிர்கொள்ளும் சவாலின் ஆழத்தை நாட்டு மக்களுக்கான தனது விசேட உரையின்போது நேரடியாகவே ஏற்றுக்கொண்டுள்ளமையானது அவரது நேர்மையான தலைமைத்துவத்தின் வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.
'ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது' என்று அவர் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தினார்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதால், இழந்தவர்களை மீட்க முடியாவிட்டாலும், அவர்களின் குடும்பங்களுக்கான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும் என்றும், 'இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது' என்றும் அவர் மனிதநேயத்துடன் குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த இயற்கை அனர்த்தத்தின் ஆபத்தான விளைவுகள் மனித உயிர்களுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் ஆழமாகப் பதிந்துள்ளன. பொருளாதாரம் மீண்டெழுந்து கொண்டிருந்த முக்கிய சந்தர்ப்பத்தில் இந்தச் சவால் ஏற்பட்டதால், சிறு சுயதொழில் முயற்சிகள் முதல் பாரிய கைத்தொழில்கள் வரை வருமானத்தை இழந்து, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எனப் பலதரப்பட்ட மக்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இந்தச் சூழலைச் சீர்செய்ய, துரித திட்டம் அவசியமாகிறது. அதற்குரிய அவசரமான நடவடிக்கைகளும் தேவையாக இருக்கின்றன.
மேலும், அத்தியாவசிய சேவைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. 'பல பகுதிகளில் மின்சார வலையமைப்பு சேதமடைந்துள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரவேச வீதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் அழிக்கப்பட்டுள்ளன' என்று ஜனாதிபதி தனது உரையில் ஆபத்தின் அளவை விளக்கினார். சேதமடைந்துள்ள பிரதான வீதிகள், பாலங்கள், கிராமிய வீதிகள் ஆகியவற்றைத் துரிதமாக மீள்நிர்மாணம் செய்ய வேண்டிய பாரிய சவால் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாபெரும் சவாலை முகாமைத்துவம் செய்யவும், விரைவான மற்றும் திறமையான மீள்கட்டமைப்புக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பையும் வளங்களையும் வழங்கவும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி உரையாற்றுகையில், 'இந்த அனர்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும், நமது நாட்டை செயற்திறனுடன் கட்டியெழுப்புவதற்காக அன்றி வேறு எந்த அடக்குமுறை நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம்' என்று உறுதியளித்தார். அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் மையப்படுத்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய சேவை அலுவலகங்கள் 24 மணி நேரமும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் முகமாக, நிர்வாகத் தடைகளை நீக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இருந்த சுற்றறிக்கைத் தடைகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 'அந்த சுற்றறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மாற்றியமைத்து. அனைவருக்கும் அரசாங்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம்' என்று உறுதிபடத் தெரிவித்தார்.
நிதி அதிகாரப் பரவலாக்கலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், 'ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் ரூபா வரை செலவிட அனுமதி அளித்துள்ளோம்' என்றார். அத்துடன், 'கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 3,000 கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் செலவிட முடியும். அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம்' என்றும் நிதி ஒதுக்கீட்டில் இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த மாபெரும் சவாலை அரச இயந்திரத்தால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசு-தனியார் கூட்டு முயற்சியில் 'இலங்கையை உருவாக்குவோம்' என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். 'நாம் இந்த அழிவிலிருந்து மீள்வதற்கு எமக்கு பாரிய நிதி உதவிகள் தேவைப்படுகின்றன' என்ற யதார்த்தத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அரச நிறுவனங்களால் மாத்திரம் தனித்து இதனை எதிர்கொள்ள முடியாது. எனவே அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், வர்த்தக சமூகம் உள்ளிட்ட பலரிடமிருந்து இதற்கான ஒத்துழைப்புகளை கோர எதிர்பார்த்துள்ளோம்' என்று அனைத்துத் தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிதியத்தை நிர்வகிக்க தனியார் துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் அடங்கிய கூட்டு முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் அவசியம் என வலியுறுத்தி, அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கான பட்டியலைத் தயாரிக்கப் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் பாராட்டிய ஜனாதிபதி, முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச ஊழியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவித்தார். இறுதி அழைப்பாக, தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், 'இந்த பேரழிவு நடந்துள்ள தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம்' என்று தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், 'எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்றுகூறி, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து தேசிய பணியில் கவனம் செலுத்தக் கோரினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 'இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்துவோம். சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த மாபெரும் சவாலை ஏற்று, பூச்சியத்தில் இருந்து கூட ஒரு சிறந்த நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவர் தலைமையில் தெளிவாகிறது. அதற்குரிய ஏற்பாடுகளும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. ஆனால் நடைமுறையில் அவரது முன்மொழிவுகள் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றன.
ஏனென்றால், அடுத்து வரும் நாட்கள் கடினமானவை. ஒருபகத்தில் பொருளாதாரத்தினை சமாளிக்க வேண்டியுள்ளது. மறுபக்கத்தில் அன்றாட வாழ்க்கையை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே சவால்கள் இப்போது இரண்டு மடங்காகியுள்ளன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM