நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

30 Nov, 2025 | 10:32 AM
image

நாட்டில் இன, மதவாதத்துக்கு இடமளிக்கப்படாது என்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்து வருகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை தான் கொண்டிருப்பதாக அடிக்கடி தெரிவித்து வருகின்றார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அடுத்த மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் ‘இலங்கையர் தினம்’ நிகழ்வை நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘இலங்கையர் தினம்’ நிகழ்வு தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களை கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ‘இலங்கையர் தினம்’ தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மையின கட்சிகளின் தலைவர்கள் இனங்களுக்கிடையிலான சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, இன, மதவாதத்துக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கு நீங்கள் கோரும் ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்குவோம். நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு சமாந்தரமாக இலங்கையர் என்ற அடையாளம் பேணி வளர்க்கப்பட வேண்டும். இலங்கையில் அனைத்து பிரிவினருக்குமிடையில் ‘உரிமைகளின் சமத்துவம்’ இருக்க வேண்டும். இலங்கையர் தின கொண்டாட்டங்களின் போது இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக கலாசார ஊர்வலங்களை நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி முதலில் இலங்கையர்கள் அறிந்துகொள்ள வழிசெய்யுங்கள். அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதேபோன்றே கருத்து தெரிவித்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட்  பதியுதீன், “இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டைக் குழப்பும் சக்திகளால்தான் இந்த நாடு இன்னமும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுவருகின்றது. ஆகவே, இன, மதவாதத்தைப் பேசும் எந்த நபராக இருந்தாலும் அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும். அதற்கு நாம் பூரண ஆதரவினை வழங்குவோம். அத்துடன் பெளத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கையர் தினத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களும் நல்லிணக்கனத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

உண்மையிலேயே நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் மூலமாகவே நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கான சூழல் உருவாக்கப்படும். இதற்காக சகல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் அன்றுதொட்டு இன்றுவரை இன, மதவாதத்தை தூண்டுவதன் மூலம் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் குளிர்காயும் நிலைமை தொடர்ந்து வருகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இன நெருக்கடி தீர்வைக் காண முயற்சிப்பதும் ஆனால், அதற்கு எதிராக எதிரணியில் உள்ளவர்கள் இன, மதவாதத்தை தூண்டுவதும் வரலாறாகவே காணப்படுகின்றது.

ஜே.ஆர். ஜயவர்தன, ஆர்.பிரேமதாச ஆகியோரது ஆட்சிக்காலங்களிலும் இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பது குறித்து ஆராயப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபை முறைமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தவேளையில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியில் பிரதான அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணியானது பெரும் கிளர்ச்சிகளை மேற்கொண்டது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. போராட்டங்களை நடத்தியது.

அதேபோன்றே 1994ஆம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கையினை எடுத்திருந்தார். சமாதான தேவதையாக ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். 2000ஆம் ஆண்டு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியானது இந்தத் தீர்வுத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.

தீர்வுத் திட்ட நகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே தீயிட்டுக் கொளுத்தினர். எதிரணியினரின் இத்தகைய எதிர்ப்பு காரணமாக இன நெருக்கடிக்கான அந்த முயற்சியும் தோல்வி கண்டது.

2001ஆம் ஆண்டு பிரதமரால் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் சமாதான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் இடம்பெற்றன. ஆனால், அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட்ட எதிரணியினர் இந்த சமாதான முயற்சிக்கு எதிராக செயற்பட்டனர்.

2004ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்கப்பட்டது. இதன்போது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியும் தீவிரமாக செயற்பட்டது.

இதன்பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னராவது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளே இடம்பெற்றன.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனநெருக்கடிக்கு தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசியல் தீர்வைக் காண்பதற்கும் இந்தக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனாலும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினர் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டனர். இதனால் இந்த முயற்சியும் இடைநடுவில் கைவிடப்பட்டது.

இதன்பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக் ஷவும் அதனையடுத்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. 13ஆவது  திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவும் முயற்சிக்கப்பட்டது.

ஆனால், பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முயற்சியிலும் தடைகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்துதான் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்றிட்டம் குறித்து ஆராயப்படுகின்றது.

இலங்கையர் தினத்தை கொண்டாடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இன, மதவாதத்துக்கு இடமளிக்காமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தகைய எதிர்பார்ப்பை இலக்காகக் கொண்டே கடந்த பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கை சேர்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

அந்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடமைப்பட்டிருக்கின்றது. எனவே, இன, மதவாதத்துக்கு இடமளிக்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமானது இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43
news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13