நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பயணத்தின் போது பழிகூறல் மற்றும் அவமானப்படுத்தல்கள் பிரச்சினையல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் பன்னிப்பிட்டிய, ஸ்ரீ தர்ம விஜயாலோக்க விகாரைக்கு மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பிரானின் திருவுருவத்தை திரைநீக்கம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

அன்று புத்தபிரான் கூட அவமானப்படுத்தல்களுக்கு உட்பட்டிருந்த நிலையில் வர்த்தகமயமாக்கலுடன் இன்று சீர்குலைந்து போயுள்ள சமூகத்தில் தான் அவமானப்படுத்தப்படுவது புதுமையான விடயமல்ல.

அத்துடன் இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி அரசியல் தலைவரான பண்டாரநாயக்கா ஆகியோர், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தமது வரலாற்றுக் கடமையை ஆற்றிய போது அவர்கள் அவமானப்படுத்தப்பட்ட முறையையும் ஜனாதிபதி அவர்கள் நினைவு கூர்ந்தார்.

அறிவைப் பெறுவதற்காகவும், சமூக அபிவிருத்திக்கோ அன்றி அவமானப்படுத்தல்களுக்காகவோ இன்று நவீன தொழில்நுட்பம் பாவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த மோசமான நிலையிலிருந்து இளம் தலைமுறையினரை மீட்பதற்காக அவர்களிடம் ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி புத்தபிரானின் புதிய சிலைக்கு மலர்தூவி, மக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைத்தார்.

மியன்மாரைச் சேர்ந்த கதந்தா சத்தம்மகீத்திசார தேரர் ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றை வழங்கினார்.

ஜனாதிபதி அதிவண. இத்தேபான தம்மாலங்கார தேரரை தரிசித்து நலம் விசாரித்தார். அதிவண. நாபான பேமசிறி தேரர், வண. திம்புல்கும்புறே விமலதம்ம தேரர், வண. யட்டிராவன சீலானந்த தேரர் உள்ளிட்ட தேரர்களும் அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஸ, தயா கமகே, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.