பருத்தித்துறை வடக்கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிபாலன் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி படகில் இலங்கை எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அமிர்தலிங்கம் குமரன் சித்திரவேல் வீரய்யன் மாரியப்பன் அண்ணாத்துறை பாலமுருகன் ராஜேஷ் ஆகிய எட்டு இந்திய மீனவர்களையும் கடற்படையினர் இன்று மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் உத்தரவிற்கினங்க மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.