திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து இளம் யுவதிக்கும் பெண் ஒருவருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை பிரதேச வாசிகள் சேர்ந்து தாக்கி பின்னர் பிடிகல பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

பிரதேச வாசிகள் ஒன்றினைந்து சந்தேக நபரை சுற்றிவளைக்க முயற்சிக்கும் போது குறித்த சந்தேக நபர் கத்தியால் இரு பிரதேச வாசிகளை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான இருவரும் எல்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 39 வயது நிரம்பிய சந்தேக நபர் தனது மனைவியை கொலை செய்தமை மற்றும் ஒரு நபரை கொலை செய்தமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 10 வருட காலமாக சிறை தண்டணை பெற்றவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும் குறித்த சந்தேக நபர் முச்சக்கரவண்டிக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக 50 நாட்கள் சிறைத்தண்டணை பெற்று குறித்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னரே விடுதலை பெற்றுள்ள நிலையிலேயே திருட்டுத்தனமாக வீடொன்றினுள் சென்று இரு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எல்பிடிய மஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.