திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் பெளத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டு பொலிஸாரினால் அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்பட்ட விவகாரமும் சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் எழுச்சியை பறைசாற்றியிருக்கின்றது.
இதனைவிட, சிங்கள தேசிய இனவாதத்தின் கோர முகத்தையும் அது வெளிப்படுத்தியிருக்கின்றது. அத்துடன், பிரதான சிங்கள தேசியக் கட்சிகளின் தலைவர்களது இனவாத முகத்தையும் அது வெளிக்காட்டியுள்ளது.
திருகோணமலை மாநகர சபைக்கு சொந்தமான கடற்பகுதியில் ஏற்கெனவே உள்ள அரச மரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து புதிய வணக்கஸ்தல கட்டுமான வேலைகள் கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஒரு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெளத்த பிக்குகளின் அனுசரணையுடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முறையிட்டதையடுத்து, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் பெளத்த வணக்கஸ்தலத்துக்கான கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென அங்கு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது. சட்டவிரோதமான இந்த செயற்பாடு தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா உட்பட்டோர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிணங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவுக்கமைய புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கு பெளத்த பிக்குகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும், அதனை மீறி பொலிஸார் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
சட்டவிரோதமாக பெளத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் அங்கு அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டமையும் தவறான செயற்பாடுகளாகும். இதனால்தான் அதனை அகற்றுவதற்கு பொலிஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்கான உத்தரவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் வழங்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஆட்சி நடத்தப்படும் என்று உறுதி வழங்கியிருந்தது. அதற்கான முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டே வந்தது. அதன் ஒரு படியாகவே அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெளத்த மத ஸ்தாபனமும் புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், புத்தர் சிலை அகற்றப்படும் ஒளிப்பதிவினை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இதேபோன்றே பல தலைவர்களும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை வரவேற்றிருந்தனர்.
ஆனால் சிங்கள, பெளத்த தேசியவாத அமைப்புகள் இந்த விடயத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அதற்கு அடிபணிந்திருந்தது. புத்தர் சிலை அகற்றப்பட்டு பதினைந்து மணிநேரம் கழிவதற்கு முன்னரேயே அந்த சிலையை மீளவும் அகற்றப்பட்ட அதே இடத்தில் வைப்பதற்கான உத்தரவை அரசாங்கம் பிறப்பித்திருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதற்கான உத்தரவை விடுத்திருந்தார். இதற்கிணங்க திருகோணமலை செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட மாநாடு நடத்தப்பட்டு, மீளவும் அகற்றப்பட்ட புத்தர் சிலையை அதே இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அகற்றிய பொலிஸாரே அந்த புத்தர் சிலையை எடுத்துச் சென்று அதே இடத்தில் வைத்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றிய அரசாங்கம், சிங்கள, பெளத்த தேசியவாத சக்திகளுக்கு அடிபணிந்து அதனை மீளவும் அகற்றப்பட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்தமையானது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கை அல்ல.
சட்டம் சகல மதங்களுக்கும் சகல இனங்களுக்கும் சமமானது. அதில் பெளத்த மதத்துக்கு முன்னுரிமை, ஏனைய மதங்களுக்கு பின்னுரிமை என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததாகும். சட்டம் சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடானது சிங்கள, பெளத்த தேசியவாத கட்சிகள் அனைத்துமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றது.
பெளத்த, சிங்கள தேசியவாதத்துக்கும் இனவாதத்துக்கும் பயந்து நடுங்கும் அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இன்று வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடு இவ்வாறிருக்கையில், புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை இனவாத நோக்கோடு சிங்கள தலைமைகள் உடனடியாகவே அணுகிய முறைமையானது நாட்டில் தேசிய நல்லிணக்கம் என்பது தற்போதைக்கு சாத்தியமற்றது என்பதை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருந்தது. புத்தர் சிலை அகற்றப்பட்டதையடுத்து, பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அந்த விடயம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
பெளத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டமை தவறான செயற்பாடு என்று விசனம் தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி., அமைச்சர் ஒருவரின் உத்தரவுக்கமையவே பொலிஸாரால் பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தமை சிறுபான்மையின மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
“திருகோணமலை சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம், உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு உள்ளது. அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீராக்க உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருந்தார். பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதேபோன்றே “சிங்கள, பெளத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. பெளத்தம் இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையைக் கொண்டது. இந்த அரசாங்கம் இல்லாத இனவாதத்தை இருப்பதாகக் குறிப்பிட்டு இனங்களை வேறுபடுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று பாராளுமன்றத்தில் சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்திருந்தார்.
இதேபோன்றே சிங்கள, பெளத்த தேசியவாத தலைவர்கள் பலரும் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரமானது பெளத்தத்துக்கே பேராபத்தாக அமைந்து விட்டது என்ற சாரப்பட கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்தில் கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, புத்தர் சிலைக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவே அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றியதாகவும் அதே இடத்தில் அதனை வைப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை வைத்து இனவாதத்தை மீண்டும் தூண்டும் செயற்பாட்டில் சிங்கள, பெளத்த தேசியவாத சக்திகள் ஈடுபட்டிருந்தனர். அதற்கு அடிபணிந்து அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த விடயமானது சிறுபான்மையின மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது. கடந்த கால கறைபடிந்த வரலாற்றையும் மீட்டிப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் அடிபணியாது, ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM