பரிசோதனை செய்து கொண்டு அவை தீங்கற்ற கட்டிகளா? அல்லது புற்றுநோயிற்கான கட்டிகளா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதே போல் மார்பகத்தில் கட்டியில்லாமல் நீர் கசிவு,குருதி கசிவு இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரி சோதனையை செய்துகொள்ளவேண்டும். அத்துடன் ஒவ்வொரு மாதமும் மாதவிடாயிற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ மார்பகத்தில் கட்டியிருக்கிறதா? என சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.’ என்ற எச்சரிக்கையுடன் எம்முடன் பேசத் தொடங்குகிறார் டொக்டர் செல்வி ராதாகிருஷ்ணா. இவர் சென்னையில் இதற்காகவே பிரத்யேகமான சென்னை பிரெஸ்ட் சென்டர் என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரிடம் மார்பக புற்றுநோய் குறித்து கேட்டறிந்தோம்.

ஒவ்வொரு பெண்ணின் அக்குள் பகுதியிலிருந்து, அடி வயிறு பகுதி வரைக்கும் இரண்டு புறத்திலும் மில்க் லைன் எனப்படுபவை இருக்கும். இவை தான் மார்பகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு சில தருணங்களில் இவற்றில் கூடுதலான மார்பக திசுக்களோ அல்லது மார்பக காம்புகளோ இருக்கும். இப்படி கூடுதலாக இருப்பவைகளால் தான் மார்பகத்தின் வளர்ச்சி சமச்சீரில்லாமல் இருக்கும். அதாவது ஒரு புற மார்பகம் பெரிதாகவும், மற்றொரு புற மார்பகம் சிறிதாகவும் இருக்கும். இரு மார்பகங்களுக்கிடையேயான வித்தியாசம் சிறியஅளவில் இருந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு சில இளம் பெண்களுக்கு மார்பகத்தின் வளர்ச்சி சமச்சீராக இல்லாததால் மன உளைச்சல் ஏற்படும். அவர்கள் பழகும் தோழிகளின் வட்டாரத்தில் வெளிப்படுத்தப்படும் விமர்சனங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, தங்களை மேலும் மன அழுத்தங்களுக்கு ஆளாக்கிக்கொள்கிறார்கள். இந்நிலையில் எங்களிடம் ஆலோசனைக்காக வருபவர்களிட மார்பகத்தின் வளர்ச்சி நிறைவடைந்த பின்னர் திருத்தியமைத்துக்கொள்ளும் படி அறிவுறுத்து கிறோம். மார்பகத்தின் வளர்ச்சி நிறைவடைந்தபின் எந்த மார்பகம் இயல்பாக இருக்கிறதோ அதனை வைத்து, சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும் மற்றொரு மார்பகத்தை சத்திர சிகிச்சை மூலம் இயல்பாக்குகிறோம். ஒரு சிலருக்கு மார்பகமேயிருக்காது. அவர்களுக்கு பால் சுரப்பதில் பிரச்சினை ஏற்படும். இதனால் இவர்களுக்கு விசேடமான சத்திர சிகிச்சையினை மேற்கொள்கிறோம்.

மார்பகத்தை செயற்கை முறை யில் பெரிதாக்கப்படும் போதோ அல்லது குறைக்கப்படும்போதோ எவ்விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சிலர் கேட்பர்.  அவர்களுக்கான அறிவுரை இது தான். எம்முடைய மருத்துவமனைக்கு மார்பகங்கள் மிகச்சிறியதாக இருப்பதாக கூறி ஆலோசனை பெறுவதற்காக வருவார்கள். அவர்களின் வயது, உடல் எடை, மார்பக வளர்ச்சியின் நிலை ஆகியவற்றை பரிசோதித்த பின்னரே உரிய சிகிச்சை வழங்கு கிறோம். ஆண்களின் மார்பைப்போல் தட்டையாக இருக்கிறது என்று கூறி வருபவர்களிடம், அவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு, செயற்கையான மார் பகத்தை இம்ப்ளாண்ட் என்ற முறையில் மார்பகத்தில் சத்திர சிகிச்சை செய்து பொருத்துகிறோம். இம்முறையில் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகத்தால் சில இன்பெக்ஷன்கள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு இதனூடாகவே மார்பகம் வளரும். அப்போது மார்பகத்தின் வெளித்தோற்றத்தில் மாறுபாடு ஏற்படலாம். செயற்கை மார்பகத்தை ஒரு கட்டத்தில் எடுத்துவிடவேண்டும் என எண்ணினால், சத்திர சிகிச்சை செய்து எடுத்துவிடலாம். வேறு சிலர் தங்களுடைய மார்பகங்கள் அளவுக்கதிமாக பெரிதாக இருக்கிறது. அதனை சீராக்குங்கள் என்று கூறுவர். அவர்களுக்கு அவர்களின் உடல் எடை, மார்பகத்தின் அதீத வளர்ச்சி, மார்பகம் பெரியதாக இருப்பதால் அவர்கள் சந்திக்கும் உடல் ரீதியான அசௌகரியங்கள் ஆகிய வற்றை கவனத்தில் கொண்டு தான் சிகிச்சையளிக்கிறோம். இவர் களுக்கான சத்திர சிகிச்சைக்கு பிறகு அப்பகுதியில் தழும்புகள் ஏற்படும். அவை மறையாது. ஒரு சிலருக்கு அபூர்வமாக மார்பு காம்புகளில் தொடு உணர்வு குறையும். வேறு சிலருக்கு குழந்தைக்கு பால் புகட்ட முடியாமற்போகலாம். அதனால் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பின் அவர்கள் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு எச்சரிப்போம். ஏனெனில் கர்ப்பம் தரிக்கும் போது மார்பகம் மீண்டும் பெரிதாகும் வாய்ப்பு உண்டு.

ஒரு சிலர் மம்மோகிராம் சோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் உறுதியாக ஆம் என்று தான் பதிலளிக்கிறேன். ஏனெனில் மம்மோகிராம் என்பது மார்பகப் புற்று நோயை வருமுன் கண்டறிய பயன்படுத்தும் பரிசோதனை. நாற்பது வயதைக் கடந்த யாருக்கு வேண்டுமானாலும் இவ்வகையான புற்று நோய் வரலாம். அதற்காகத்தான் நாற்பது வயதை கடந்த அனைத்து பெண்களும் ஆண்டிற்கு ஒரு முறை இவ்வகையான சோதனை செய்துகொள்ளவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த சோதனையின் போது, மார்பகங்களில் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதால் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். ஆனால் இதனை செய்துகொள்வது தான் சிறந்தது. இந்த அசௌகரியங்களை குறைப்பதற்காகவே தற்போது டிஜிற்றல் முறையிலான மம்மோகிராம் பரிசோதனை அறிமுகமாகியிருக்கிறது. இதன் போது வலி குறைக்கப்படுகிறது. சோதனையின் முடிவுகள், துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறியப்படுகின்றன. இதன் மூலம் மார்பகங்கள் அகற்றப்படவேண்டிய சதவீதம் குறைக்கப்படுகின்றன. கீமோதெரபி என்ற சிகிச்சையின் அளவையும் குறைக்கலாம்.

ஒரு சிலர் தங்களின் மார்பகத்தை அகற்ற வேண்டியது கட்டாயமா? என திரும்ப திரும்ப கேட்பர்.  அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் பதில் இது தான். மார்பகத்தில் கட்டி ஓர் எல்லைக்கு அப்பால் வளர்ந்துவிட்டாலோ அல்லது வலி அதிகமாகிவிட்டாலோ மார்பகத்தை அகற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த தருணத்தில் கூட மார்பகத்தில் உள்ள கட்டியின் அளவு, மார்பகத்தின் அளவு என இரண்டும் கருத்தில் கொள்ளப் படுகிறது. ஒரு சிலருக்கு மார்பகம் பெரிதாக இருந்து, கட்டி சிறியதாக இருந்தால் அவர்களை மார்பகத்தின் முழு பகுதியையும் வெட்டி அகற்றாமல் கட்டியை மட்டுமே அகற்றும் சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறோம். கட்டி பெரிதாக இருந்து, மார்பகம் சிறியதாக இருந்தால் மட்டுமே மார்பகத்தை அகற்றிவிடுகிறோம். உடனே ஒரு சிலர் மார்பகத்தை அகற்றிவிட்டால் புற்றுநோயிலிருந்து குணமாகிவிடலாமா? என கேட்கிறார்கள்.  இவ்வகையினதான சிகிச்சையால் முழுவதுமாக குணப்படுத்தி விட முடியும் என்று சொல்ல இயலாது. வரு முன் காக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்த இயலும். இதற்காக கீமோதெரபி, ஹோர்மோன் தெரபி என்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதில் புற்றுநோய் கட்டியை மட்டும் சத்திர சிகிச்சை செய்து அகற்றுவதற்கு லம்பக்டமி என்றும், முழு மார்பகத்தையும் புற்று நோய் கட்டியுடன் அகற்றுவதற்கு மாங்டக்டமி என்றும் பெயர். இப்போது மார்பகத்தில் உள்ள புற்றுநோய் செல்கள் வேறு எங்கு பரவியிருக்கிறது என்பதை கண்டறிந்து சிகிச்சை செய்யும் வசதிகளும் வந்துள்ளன.

இன்றைய திகதியில் மார்பகத்தை அகற்றும் சிகிச்சையில் பல நவீன தொழில் நுட்பங்களும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அதாவது ரீகன்ட்ஸ்ரக்ஷன் என்றொரு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது முழுவதுமாக மார்பகம் எடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வயிறு அல்லது முதுகு பக்க தசைகளை எடுத்து மார்பகம் இருக்கும் இடத்தில் பொருத்துவது. இதனால் மார்பகம் இல்லையென்ற நிலை ஏற்படுவதை தவிர்த்துவிடுகிறோம். அத்துடன் மார்பகத்தை அகற்றுபவர்களுக்கு பின் விளைவாக கை பகுதிகளில் நிணநீர் சேர்ந்து வீக்கம் ஏற்படும். இதனையும் தற்போதைய நவீன தொழில் நுட்பங்களால் குறைத்திருக்கிறோம். அதற்காக அக்குள் பகுதியில் இருக்கும் கட்டிகளை சத்திர சிகிச்சை நீக்குவதில் ஒருவித கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறோம். மேலும் சந்தேகங்கள் இருந்தால்  0091 44 2461 0831 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். 

தொகுப்பு: திவ்யா