கணேமுல்ல பகுதியில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்படும் கணேமுல்ல மேம்பாலம்  இவ் வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் பிரதான நகரமாக விளங்கும் கணேமுல்ல நகரத்திற்கு அன்றாட நடவடிக்கைகளுக்காக பெருந்தொகையான மக்கள் கூட்டம் வந்து செல்வதாலும் நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாதையின் காரணமாகவும் அங்கு பாரிய வாகன நெரிசல்கள் ஏற்படுவதால் மக்கள் நீண்ட காலமாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ் வருட இறுதியில் கணேமுல்ல மேம்பாலத்தை மக்கள் பாவனைக்காக பெற்றுக்கொடுக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலும் இலகுபடுத்தும் வகையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் கீழ் செயற்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இம் மேம்பாலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரித்தானிய இரும்புப்பாலம் செயற்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் இம் மேம் பாலமானது 504 மீற்றர் நீளமுடையது எனவும்  இப் பாலத்திற்காக 1760 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் வீதி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.