ஒற்றையாட்சி வேண்டாம் என்றும் சமஷ்டியே தேவை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் கூறிக்கொண்டிருக்கட்டும்.  ஆனால் நாங்கள்  இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும்  மஹிந்த ஆதரவு அணியின்  முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன  தெரிவித்தார். 

சம்மந்தனின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்த்தால் புதிய அரசியலமைப்பை விடுத்து ஒரு சட்டமூலத்தைக் கூட அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஒற்றையாட்சி  முறைமையை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். இணைந்த வடக்கு கிழக்கில்  சமஷ்டி முறைமையிலேயே  எமக்கு தீர்வு அவசியம் என்று   எதிர்க்கட்சித் தலைவர்  இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து வெளிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன்  எப்போதுமே இவ்வாறான கோரிக்கைகளைதான் முன்வைப்பார்.  அது அவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்ல.  சர்வதேச அமைப்புக்களின் அழுத்தங்களுக்கு உட்பட்டே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைக்கின்றார். புலம்பெயர் அமைப்புக்கள் கூறுகின்றவற்றையே  சம்மந்தன் கூறிவருகின்றார். 

ஆனால் அரசாங்கம்   ஒற்றையாட்சியை தாண்டி எவ்வாறான  முறைமைக்கும் செல்லாது.   ஜனாதிபதியும் பிரதமரும் இவ்வாறு   ஒற்றையாட்சி முறைமையை மீறி செல்லமாட்டோம் என கூறியுள்ளனர்.   அதனை அவர்கள் அவ்வாறே நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம். 

ஆனால் 16 ஆசனங்களை வைத்துக்கொண்டு   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகளை முன்வைப்பதானது  நாட்டில் அரசியல் நெருக்கடிகளையே ஏற்படுத்தும். இந்த இடத்தில் ஒரு விடயத்தை  தெளிவாக கூறவேண்டும். 

அதாவது  சம்மந்தனின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்த்தால் புதிய அரசியலமைப்பை விடுத்து ஒரு சட்டமூலத்தைக் கூட அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது போய்விடும்.  நாட்டுக்கு எதிரான  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால்   தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. க்களும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்துவிடுவார்கள். 

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து  எதிர்ப்போம்.   அவ்வாறு நாங்கள் எதிர்க்க முன்வந்தால் அரசாங்கத்துககு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைவிடுத்து சாதாரண பெரும்பான்மைக் கூட  கிடைக்காது. இது அரசாங்கத்துக்கும் நன்றாக தெரிந்த விடயமாகும். 

ஐக்கிய இலங்கை என்ற கோட்பாடு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தல்  சமஷ்டி முறைமை  பகிரப்பட்ட இறையாண்மை உள்ளிட்ட கூட்டமைப்பின் எந்தவொரு கோரிக்கைக்கும் நாங்கள்  இடமளிக்கமாட்டோம். அவற்றை    கடுமையாக எதிர்க்கின்றோம். 

அந்தவகையில் ஒற்றையாட்சி வேண்டாம் என்றும் சமஷ்டியே தேவை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் கூறிக்கொண்டிருக்கட்டும்.  ஆனால் நாங்கள்  இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.