பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை 288 - 8 விக்.

Published By: Vishnu

14 Nov, 2025 | 07:27 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை வீரர்களின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருநாள் பிற்போடப்பட்டு ராவல்பிண்டியில்  வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் போன்றே முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத நிலையில் மத்திய வரிசை வீரர்கள் நால்வர் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதன் பலனாக இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

அவர்களில் ஜனித் லியனகே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி இருந்தார்.

முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் பவர் ப்ளேயில் பெத்தும் நிஸ்ஸன்கவும் காமில் மிஷாரவும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்துகொடுத்தனர்.

ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க (24), காமில் மிஷார (27), குசல் மெண்டிஸ் (20),  அணித் தலைவர்  சரித் அசலன்க ஆகியோர் (7) சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (98 - 4 விக்.)

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் ஜனித் லியனகேவும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உயிர்கொடுத்தனர்.

சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

ஆனால், கமிந்து 44 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும் பெற்ற 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (241 - 7 விக்.)

வனிந்து ஹசரங்க மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்று அணியை சிறப்பான நிலையில் இட்டார்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்