காந்தா- திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஸ்பிரிட் மீடியா & வேஃபரர் பிலிம்ஸ்
நடிகர்கள் : துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்ய ஸ்ரீ போர்சே, ராணா டகுபதி, காயத்ரி, நிழல்கள் ரவி, பகவதி பெருமாள், வையாபுரி ,ரெடின் கிங்ஸ்லி ,ரவீந்திர விஜய், மற்றும் பலர்.
இயக்கம் : செல்வமணி செல்வராஜ்
மதிப்பீடு : 3/ 5
1950களில் தமிழ் திரையுலகின் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் திரைப்படம் என்ற அதீத எதிர்ப்பார்ப்பால்.. இப்படத்தினை காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு.. அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் படைப்பு இருந்ததா? அல்லது வித்தியாசமான அனுபவத்தை வழங்கியதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அந்த காலகட்டத்தில் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று நிதிச் சுமையால் தொடர்ந்து படங்களை தயாரிக்க இயலாத நிலையில்.. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான மார்டின் சிவசங்கரன்- தமிழில் முதல் பேய் படம் என வெளியாகும் 'சாந்தா ' எனும் திரைப்படத்தை .. அந்நிறுவனத்திற்கு பல வெற்றி படங்களை வழங்கிய அய்யா எனும் இயக்குநரை வைத்து படத்தின் பணிகளை மீண்டும் தொடங்குகிறார்.
'சாந்தா' எனும் பெயரில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தொடங்கி இடைநிறுத்தம் செய்யப்பட்ட இப்படத்திற்கு முன்னணி நட்சத்திர நடிகரான டி கே மகாதேவன் கதையின் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இந்த படம் ஏற்கனவே தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு அப்படத்தின் இயக்குநரான அய்யாவிற்கும், படத்தின் நடிகரான டி கே மகாதேவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துகள் முரண்பாடு தான் காரணம்.
இந்நிலையில் தனது தாயாரின் நினைவாக இப்படத்தின் கதையை எழுதியுள்ள இயக்குநரான ஐயா- இப்படத்தை சாந்தா எனும் பெயரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி படத்தை வெளியிட வேண்டும் எனும் தனது திரையாளுமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.
ஆனால் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வரும் டி கே மகாதேவன் இப்படத்தின் தலைப்பை 'காந்தா' என மாற்றி , தன்னுடைய ரசிகர்களுக்காகவும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்கான படைப்பாகவும் உருவாக்க மனதில் உறுதி கொள்கிறார். இதனிடையே இப்படத்தில் குமாரி எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை ஒருவர் அறிமுகமாகிறார்.
பர்மாவில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த இந்தப் பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்து, நடிப்பிற்கு பயிற்சி அளித்து, கதையின் நாயகியாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் அய்யா. அதனால் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் அய்யாவிற்கும் , நடிகர் மகாதேவனுக்கும் இடையேயான ஈகோ மோதலில் - பனிப்போரில்- குமாரி பகடைக்காயாகிறார்.
குமாரியின் வனப்பிலும், வசீகரமான தோற்றத்தாலும் அப்பாவியான குணத்தாலும் கவரப்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார் மகாதேவன். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான மார்ட்டின் பிரபாகரன் - குமாரியை அடைய வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். படத்தின் படப்பிடிப்பு 45 நாட்கள் வரை நடைபெறுகிறது.
படப்பிடிப்பின் இறுதி நாள் அன்று கதாநாயகியாக அறிமுகமாகும் புதுமுக நடிகை குமாரி துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைகிறார். அவரைக் கொன்றது யார் ? எதற்காக கொல்லப்பட்டார்? இப்படம் இயக்குனரின் விருப்பப்படி வெளியானதா ? அல்லது நட்சத்திர நடிகரான மகாதேவனின் எண்ணப் படி வெளியானதா? என்பதை விறுவிறுப்பாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதியில் அந்த காலகட்டத்திய படப்பிடிப்பு தளங்கள் - நடிகர்கள் -நடிகைகள் -அவர்களின் பயிற்சிகள்- ஒத்திகைகள் - போன்ற விபரணங்களுடன் காட்சிகள் நகர்வதும் அதனுள் நீயா? நானா? என்ற ஈகோ தனமான காட்சிகளும், புதுமுக நடிகை - உச்ச நட்சத்திரம் இடையேயான காதல் காட்சிகள் இடம் பிடித்திருப்பதும்.. அதனை விறுவிறுப்பாக நகர்ந்து செல்வதும் என ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கிறது.
இரண்டாம் பாதியில் கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேட்டட் ஜேனருக்குரிய முக்கிய துருப்பு சீட்டான யார் கொலை செய்திருப்பார்கள்? என்ற விறுவிறுப்பு ரசிகர்களை பதட்டமடைய செய்கிறது. இறுதியில் யாரும் யூகிக்காத வகையில் காட்சிகள் அமைத்திருப்பதும்.. அதற்கான காரணங்களை விவரித்திருப்பதும் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது.
படத்தின் துல்கர் சல்மான் - அந்தக் காலகட்டத்திய உச்ச நட்சத்திர நடிகரான டி கே மகாதேவனாக திரையில் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து உச்சகட்ட காட்சி வரை ரசிகர்களை தன் வசிய வளையத்திற்குள் சிக்கவைத்து, அதிலிருந்து மீள முடியாத வகையில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கட்டிப் போடுகிறார். அதிலும் 'எளிதாக ஊதித் தள்ள நான் மணல் அல்ல.. மலை' என்று பஞ்ச் டொயலாக் பேசும் காட்சியில் மிரட்டுகிறார். புதுமுக நடிகையான குமாரியின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவரை முன்வரிசையில் அமர வைத்து விழா மேடையில் பாட்டு பாடுவது... ரசனை+ வசீகரம். தன் திரையுலக பயணத்தையும், மக்களிடம் உருவாக்கி இருக்கும் செல்வாக்கும் தான் திட்டமிட்டு உருவாக்கியது. இதனை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்ற அவருடைய நிலைப்பாடும், அதற்கான நடிப்பும் சபாஷ் சொல்ல வைக்கிறது.
இயக்குநர் அய்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி வித்தியாசமான நடிப்பால் எளிதாக கவர்கிறார். அதிலும் பல இடங்களில் அவருடைய குருநாதர் கே. பாலச்சந்தரின் உடல் மொழியில் தோன்றுவது வியக்க வைக்கிறது. சினிமா வெகுஜன ஊடகம். அதனூடாக மக்களுக்கு நல்ல விடயங்களை போதிக்க வேண்டும்.
அதற்கு நடிகர்கள் மட்டுமல்ல கலைஞர்களும் பணிவுடன் தான் இருக்க வேண்டும் என்ற அவருடைய கொள்கையும், அந்த கொள்கைக்காக அவர் திரையில் ஏற்படுத்தும் பிம்பமும்.. ரசிகர்களுக்கு எனர்ஜி. இதனூடாக திரைப்பட இயக்குநர் எனும் படைப்பாளியின் சமூக பொறுப்புணர்வு - இன்றைய இளம் தலைமுறை படைப்பாளிக்கு உணர்த்தப்படுவதையும் பாராட்டலாம்.
புதுமுக நடிகை குமாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாக்ய ஸ்ரீ போர்சே தனக்கு கிடைத்திருக்கும் முத்தான வாய்ப்பை சத்தாக பயன்படுத்தி, தன் திரை இருப்பை ரசிகர்களுக்கு வலுவாக உணர்த்துகிறார்.
இவர்களைக் கடந்து காவல்துறை அதிகாரி தேவராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா டகுபதி- குற்ற சம்பவம் தொடர்பான விசாரணையை படப்பிடிப்பு தளத்தில் மேற்கொள்வது வழக்கமானதாக இருந்தாலும்.. அதிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
இவர்களைக் கடந்து திரையில் தோன்றும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரங்களும் திரைக்கதையின் விறுவிறுப்பிற்கு தங்களுடைய நேர்த்தியான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
முதல் பாதி இரண்டாம் பாதி என இரண்டு வெவ்வேறு வகையினதான படத்தொகுப்பை மேற்கொண்டு ரசிகர்களுக்கு உற்சாகமான படமாளிகை அனுபவத்தை வழங்குகிறார் படத்தொகுப்பாளர்.
நடிகர்களின் பங்களிப்பிற்கு நிகராக ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
காந்தா- காந்த மலை ஜோதி











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM