(நெவில் அன்தனி)
வெளிப்படைத்தன்மை இல்லாமல் சிறந்த ஆளுமையைக் கட்டி எழுப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் சிறந்த ஆளுமைதான் பிரதானம். அதற்கான சீர்திருத்தம் இலங்கையில் அவசியம். ஆளுகை சீர்திருத்தமானது நல்ல முடிவுகளை எடுப்பதற்கான விதிகளை வழங்குகிறது. ஆனால், கலாசாரம்தான் (பண்புகள்) அந்த விதிகளுக்கு உயிர் கொடுக்கிறது என அவுஸ்திரேலியாவின் மேல்பர்ன் லா ட்ரோப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெவ் டிக்சன் தெரிவித்தார்.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஒலிம்பிக் இல்லத்தின் ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'இலங்கை விளையாட்டுத்துறை சங்கங்களில் சிறந்த ஆளுமையைக் பலப்படுத்துதல்' எனும் தலைப்பிலான கருத்தரங்கில் பேசியபோதே ஜெவ் டிக்சன் இதனைத் தெரிவித்தார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் உப தலைவர் நிலூ ஜயதிலக்க, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அனோமா ரட்நாயக்க, இலங்கையில் இயங்கும் பல்வேறு விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகள், தேசிய விளையாட்டுத்துறை பேரவைத் தலைவர் பிரியன்த ஏக்கநாயக்க ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
சிவராஜா கோபிநாத்தினால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜெவ் டிக்சன், 'அவுஸ்திரேலிய விளையாட்டுத்துறை பேரவையினால் வகுக்கப்பட்ட மிக உயரிய கட்டமைப்பைக் கொண்ட ஆளுமை (நிருவாகம்) முறைமை அவுஸ்திரேலியாவில் அமுலில் இருக்கிறது. அதேபோன்று இலங்கையிலும் இருப்பது விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும். அத்துடன் அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரே ஒரு மூலோபாய திட்டம், அணுகுமுறை இருக்க வேண்டும். அது இலக்கை நோக்கிய குறிக்கொளைக் கொண்டிருக்க வேண்டும். இதனைக் கருத்தில்கொண்டுதான் விளையாட்டுத்துறையில் அரசாங்கம் முதலீடு செய்யவேண்டும். அந்த முதலீடுகள் எந்தளவு கனிகொடுக்கிறது என்பது குறித்து வருடா வருடம் திறன்மதிப்பீடு செய்வது அவசியம்.
'அவுஸ்திரேலியாவில் விளையாட்டுத்துறை நிறுவனங்களின் நிறைவேற்று அல்லது பணிப்பாளர் சபைகளில் 5 முதல் 9 உறுப்பினர்களே இடம்பெறுகின்றனர். இது கருத்து பேதங்களின்றி சரியான தீர்மானங்களை வெளிப்படைத்தன்மையுடன் எடுக்க உதவுகிறது. ஆனால், இலங்கையில் ஒவ்வொரு விளையாட்டுத்துறைக்கான நிறைவேற்றுச் சபையிலும் 17 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இது பேதங்களுக்கு வழிவகுப்பதுடன் சிறந்த ஆளுமைபைப் பேணுவதில் சிக்கலைத் தோற்றுவிக்கும்.

'இலங்கையில் ஒவ்வொரு விளையாட்டுத்துறை சங்கத்திலும் வெவ்வேறு யாப்பு விதிகள் இருக்கின்றன. விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை விதிகள் ஒரு விதமாகவும் சங்கங்களின் யாப்பு விதிகள் வேறுவிதமாகவும் இருக்கின்றன. விளையாட்டுத்துறை அமைச்சின் விதிகளில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விளையாட்டுத்துறை சங்கங்களில், சம்மேனங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வருடங்கள் என்பது விரைவாக நகர்ந்து விடும். சிறந்த திட்டங்களை வகுத்து அதனை செயலுருவாக்குவதற்கு இந்தக் காலப்பகுதி நிருவாக உத்தியோகத்தர்களுக்கு போதும் என்று நான் கருதவில்லை. அது மட்டுமல்லாமல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிருவாக சபை உறுப்பினர்கள் முற்றுமுழுதாக மாறினால் அது விளையாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும்.
'சில சங்கங்களின் யாப்பு விதிகளில் சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபட்டவர்கள் மாத்திரமே அந்த விளையாட்டுக்கான நிருவாக சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் விதிகளில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், தொழில்அதிபர்கள், பேராசிரியர்கள், கணக்காளர்கள், கணக்காய்வாளர்கள் போன்றவர்கள் நிருவாக சபையில் உத்தியோகத்தர் பதவிகளுக்கு போட்டியிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகள் யாவும் பொருத்தமானவை என்று நான் கூறமாட்டேன். பதவிகளுக்கு வருபவர்களிடம் சிறந்த ஆளுமையும் விளையாட்டுத்துறையை உயரிய இடத்துக்கு கொண்டு செல்லக்கூடிய திறமையும் இருந்தால் போதும்.
'திறமையான, அர்ப்பணிப்புடன் பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்றுநர்களை உருவாக்குவது ஒவ்வொரு விளையாட்டுத்துறை சங்கத்தினதும் கடமையாகும். தரம் மிக்க பயிற்றுநர்களின் மூலம் மிகவும் திறமைவாய்ந்த வீர, வீராங்கனைகளை உருவாக்க முடியும்.

'மேலும் கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை அமைச்சும் வெவ்வேறு திசைகளில் செல்வதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டும் இணைந்து செயற்பட்டால் விளையாட்டுத்துறை செழிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது. பாடசாலைகளில் விளையாட்டுத்துறையில் ஈடுபடும் சிறுவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய கடமை சமூக விளையாட்டுக் கழகங்களை சார்ந்ததாகும். அவுஸ்திரேலியாவில் சமூக விளையாட்டுக் கழகங்கள் பாடசாலை பிள்ளைகளின் விளையாட்டுத்திறனை இனங்கண்டு அவர்களை அந்தந்த விiளாயட்டுக்களில் ஈடுபடுத்தி ஊக்குவித்து வருகின்றன. இதனை இலங்கையும் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது' என்றார்.
அவுஸ்திரேலியாவின் சிறந்த அணுகுமுறைகளிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களை விபரித்த பேராசிரியர் ஜெவ் டிக்சன், 'இணக்கப்பாட்டுக்கும் மேலாக உண்மையான நிர்வாக சீர்திருத்தம் அதிகமாக தேவைப்படுகிறது. அது கலாசார மாற்றத்தைக் வலியுறுத்துகிறது. சுதந்திரம், பொறுப்பேற்றல் (பதில்கூறல்), நிருவாக சீர்த்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியன முக்கியமாகும்.
'ஆளுகை சீர்திருத்தமானது நல்ல முடிவுகளை எடுப்பதற்கான விதிகளை வழங்குகிறது. ஆனால் கலாசாரம்தான் அந்த விதிகளுக்கு உயிர் கொடுக்கிறது. நிர்வாக சீர்திருத்தம் வெற்றிபெறுவதாக இருந்தால் அதனை நிறுவன (நிருவாக உத்தியோகத்தர்கள்) கலாசாரமே (செயல்கள், பண்புகள்) தீர்மானிக்கிறது' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM