(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள வீடொன்றில் கூரையை பிரித்து உட்புகுந்த திருடர்கள்  உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மூவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிலொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுத்தூர் கிராமசேவகர் பகுதியில் அமைந்துள்ள பெரியகமம் என்னும் இடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் எஸ்.அலெக்ஸ்சிஸ் பெர்னாண்டோ (வயது 81) அவருடைய மகன் ஆசிரியர் ஏ.பெனில்டஸ்  பெர்னாண்டோ (வயது 47), மனைவி ஆசிரியை எஸ்.இதயமலர்  (வயது 44) ஆகியோருடன் அவர்களது 12,9,3 வயதுடைய மூன்று பிள்ளைகளும் வழமைபோன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

 

அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் கூரையை பிரித்துக்கொண்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் முதலில் அவ் வீட்டிலிருந்த கம்பி ஒன்றினால் உறக்கத்திலிருந்த ஆசிரியர் மீது தாக்கியுள்ளனர் .

இதையடுத்து மனைவி, பிள்ளைகள் சத்தமிட மனைவி மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் ஓய்வுபெற்ற அதிபரான தகப்பனையும் மகனையும் கட்டிவைத்துவிட்டு திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

பணம் நகைகளை ஒப்படைக்காவிடில் மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிடுவோம் என அச்சுறுத்திய கொள்ளையர்கள், தாலிக்கொடி உட்பட அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் அயலவர்களின் உதவியுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிரியைக்கு மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இக் கொள்ளைச் சம்பவத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றுபேர் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.