(நெவில் அன்தனி)
பாகிஸ்தான் திறமை வாய்ந்த அணி. அவ்வணியுடனான தொடர் சவால் மிக்கது. எனினும் அண்மைக் காலங்களில் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் திறமையாக விளையாடியுள்ளோம். இவ்வாறான பலம்வாய்ந்த அணிக்கு எதிராக வெற்றிபெற்றால் அது எமது நம்பிக்கையை மேலோங்கச் செய்யும். எனவே, பாகிஸ்தானின் சவால்களை கச்சிதமாக எதிர்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம் என இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதே மைதானத்தில் 13, 15ஆம் திகதிகளில் அடுத்த இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரை முன்னிட்டு சமபலம் கொண்ட இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சரித் அசலன்க, அதனை சாதகமாக்கிக்கொண்டு திறமையை வெளிப்படுத்துவதுடன் தனிப்பட்ட வீரர்களின் ஆற்றல்கள் பலனளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந் நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள இலங்கைக்கும் 5ஆம் இடத்திலுள்ள பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர் சம அளவில் மோதிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் 10 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இலங்கை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் உட்பட 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்துள்ளது.
கடைசியாக ஸிம்பாப்வேக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை முழுமையாக வெற்றியீட்டியிருந்தது.
இந்த வருடம் சரித் அசலன்க (10 போட்டிகளில் 2 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 456 ஓட்டங்கள்), குசல் மெண்டிஸ் (10 போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைச் சதங்களுடன் 446 ஓட்டங்கள்), ஜனித் லியனகே (10 போட்டிகளில் 3 அரைச் சதங்களுடன் 362 ஓட்டங்கள்), பெத்தும் நிஸ்ஸன்க (10 போட்டிகளில் ஒரு சதம், 2 அரைச் சதங்களுடன் 324 ஓட்டங்கள்), கமிந்து மெண்டிஸ் (10 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 233 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திலும்
அசித்த பெர்னாண்டோ (10 போட்டிகளில் 22 விக்கெட்கள்), வனிந்து ஹசரங்க (8 போட்டிகளில் 15 விக்கெட்கள்), மஹீஷ் தீக்ஷன (9 போட்டிகளில் 12 விக்கெட்கள்), துஷ்மன்த சமீர (4 போட்டிகளில் 7 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.
இவர்களுடன் ஏனைய வீரர்களும் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தினால் பாகிஸ்தானை இலங்கையினால் வெற்றிகொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதேவேளை, பாகிஸ்தான் இந்த வருடம் விளையாடிய 14 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 4இல் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அண்மைய தொடர் (2- 1) வெற்றி பாகிஸ்தானுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இந்த வருடம் சல்மான் அகா (14 போட்டிகளில் 556 ஓட்டங்கள்), மொஹம்மத் ரிஸ்வான் (14 போட்டிகளில் 452 ஓட்டங்கள்), பாபர் அஸாம் (14 போட்டிகளில் 379 ஓட்டங்கள்), பக்கார் ஸமான் (7 போட்டிகளில் 204 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் நஸீம் ஷா (12 போட்டிகளில் 16 விக்கெட்கள்), அப்ரார் அஹமத் (9 போட்டிகளில் 15 விக்கெட்கள்), அணித் தலைவர் ஷஹீன் ஷா அப்றிடி (10 போட்டிகளில் 15 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 1975 அங்குரார்ப்பண உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து இதுவரை விளையாடப்பட்டுள்ள 157 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 93 - 59 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. நான்கு போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.
குழாம்கள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்). கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டசே, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, ஏஷான் மாலிங்க, ப்ரமோத் மதுஷான்
பாகிஸ்தான்: ஷஹீன் ஷா அப்றிடி (தலைவர்), பாபர் அஸாம், பக்கார் ஸமான், ஹஸீபுல்லா கான், மொஹம்மத் ரிஸ்வான், சய்ம் அயூப், ஹசன் நவாஸ், சல்மான் அகா, பாஹீம் அஷ்ரப், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ், அப்ரார் அஹ்மத், பய்சால் அக்ரம்,ஹரிஸ் ரவூப், மொஹம்மத் வசிம், நசீம் ஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM