( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு சாட்சியமாக மாறி இசைப்பிரியா படுகொலை, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலைகள் தொடர்பில் தொடர்புப்பட்டவர்களை வெளிப்ப்படுத்தியிருப்பதால் சரத்பொன்சேகாவை ஒரு முக்கிய சாட்சியாகக் கொண்டு இந்த அரசாங்கம் இவ்விடயங்கள் உடனடியாக ஆராய வேண்டும். என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த காலங்களில் நாட்டில் குண்டு விழ, குண்டுவிழ அதிகரித்த வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை இம்முறை குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் துண்டுவிழும் தொகை 6.5 வீதமாகவிருந்த நிலையில் இம்முறை அது 6.2 வீதமாக குறைந்துள்ளது . இது ஒரு சாதகமான விடயம். நாட்டின் பொருளாதார வளர்ச்ச்சியும் 4.8 வீதத்தால் அதிகரித்துள்ளது .
இந்த அரசாங்கம் ஊழல்,மோசடி, இலஞ்சம், போதைவஸ்து, பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்திக்கொண்டு வருகின்றது.அதேவேளை இந்த நாட்டில் சட்டவாட்சி நடைபெற வேண்டும்.மக்களை மையமாக கொண்ட ஆட்சி இடம்பெற வேண்டும்.வெற்றிகள் என்பது அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது இந்த வரவு செலவுத்திட்டத்தின் முன்னுரையாகக் காணப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.இது தீர்க்கப்படுவதும் வரவு செலவுத்திட்டத்திற்கு சாதகமாகவே அமையும். இது தீர்க்கப்பட்டால் எமது புத்திஜீவிகள், பொருளாதார வல்லுநர்கள்,நாடு கடந்து வாழ்கின்றவர்கள் எல்லாம் நாட்டுக்குள் வருகின்றபோது இந்த நாட்டின் பொருளாதாரத்தை வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாது நாடு முழுவதும் உயர்த்த முடியும்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தது.தற்போது 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை கையில் எடுக்க வேண்டுமென சொல்லப் பட்டது.
அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இந்த இறுதி யுத்தத்தில் மனித பேரவலம் இடம்பெற்றது.மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இதற்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும். உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.பரிகார நீதி வழங்க வேண்டும். மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாது தடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டன . ஆனால் இன்னும் அந்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை.
நாட்டின் பொருளாதாரத்தோடு இந்த பிரச்சினைக்கு நெருக்கமான தொடர்பிருக்கின்றது வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் தொடர்பாகவும் பேச வேண்டியிருக்கின்றது
கடந்த காலங்களில் பாலியல் பலாத்காரங்கள்,பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றிருந்தன .மத்திய முகாம் என்ற இடத்தில் கோணேஸ்வரி என்ற தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்ட்டிருந்தார்.
அதேபோன்று சாரதாம்பாள் புங்குடுதீவில் கொலைசெய்யப்ட்டிருந்தார். கிருஷாந்தி செம்மணியில் கொலைசெய்யப்ட்டிருந்தார். இசைப்பிரியா என்ற விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த இடத்தில் இது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு முக்கிய விடயத்தை சொல்லியுள்ளார். அவர் தானாக முன்வந்து சில ஒப்புதல் வாக்கு மூலங்களை ஊடகங்களுக்கு சொல்லி வருகின்றார்.
அந்த வாக்கு மூலங்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது இசைப்பிரியா படு மோசமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர் புலனாய்வு பணிப்பாளர் கபில தென்னவிதாரண என்பவர் என சரத்பொன்சேகா சொல்லியுள்ளார். அத்தோடு ஜகத் ஜயசூரிய என்பவரைப் பற்றியும் சொல்லியுள்ளார்.
யுத்தத்துக்கு தலைமைதாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு சாட்சியமாக இந்த விடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் கூட படு கொலை செய்யப்பட்டுளார்கள் இதற்கு காரணமானவர் சவேந்திரசில்வா என்றும் சொல்லியுள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் இந்த அரசாங்கம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது இந்த நிலையில்தான் யுத்தத்துக்கு தலைமைதாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவம் செய்ய குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே இந்த விடயம் ஆராயப்படவேண்டும்.
தேசியமாக்கல் சக்தி அரசுக்கு போர்க்குற்ற சாட்சியங்கள் தானாகவே கிடைத்துள்ளன. எனவே இவற்றை இந்த அரசு கையாளவேண்டும் .தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இந்த அரசு துரிதமாக கையாள வேண்டும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM