இங்கிரிய நாச்சிம்மலை ஆற்றில் தனது காதலியை நிர்வாணமாக்கி நீரில் மூழ்கடித்து கொலை செய்த காதலனுக்கு இன்று மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த கொலை வழக்கோடு தொடர்புடைய சந்தேக நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதியான கொலையாளிக்கு பாணந்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக குணதிலக இன்று மரணதண்டணை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வாறு மரணதண்டணை விதிக்கப்பட்டவர் பன்னிப்பிட்டியவை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட ஹேனேகம ரத்னசிறி ஹிமி ஹேவத் கொடிதுவக்கு ஆராச்சிகே ப்ரமிள சாரங்க எனும் பெயருடைய 34 வயதுடைய நபராவார்.

2010 ஆம் ஆண்டு மே மாதம் குறித்த நபர் இங்கிரியவைச் சேர்ந்த தனது காதலியான தோன சுனேத்ரா ப்ரியதர்ஷினியை நாச்சிமலை ஆற்றில் நிர்வாணப்படுத்தி நீரில் மூழ்கடித்து கொலை செய்தார் என்று குறித்த நபருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சந்தேக நபர் சிறு வயதில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டிருந்ததாகவும் பின்னர் துறவறத்தை துறந்து பெண் ஒருவருடன் 5 ஆண்டுகாலமாக காதல் தொடர்பை வைத்திருந்துள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து பணத்தைப் பெற்றக்கொண்டு காதல் தொடர்பை முறித்துக்கொண்டு கொரிய நாட்டிற்கு சென்று இரண்டு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

காதலன் நாடு திரும்பியுள்ளதை அறிந்துக்கொண்ட குறித்த பெண் காதலனை சந்திக்க சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து மீண்டும் காதல் தொடர்பை புதுப்பித்துக்கொண்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார்.

அதன் பிறகு சம்பவ தினமான 2010 மே மாதம் 25ஆம் திகதி திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பெண்ணை கூட்டிச்சென்றுள்ளார். காதலனோடு சென்ற குறித்த பெண்ணின் சடலம் மறு நாள் காலை இங்கிரிய பொலிஸாரால் நாச்சிமலை ஆற்றில் மிட்டெடுக்கப்பட்டது.