அடிப்படைத் தீர்வையாவது பெறுவதற்கு முயலவேண்டும்

09 Nov, 2025 | 04:18 PM
image

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளவேண்டியது அவசியம் என்று தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறைகொள்ளாது தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் அழுத்தத்தின் அவசியம் தொடர்பில் அண்மைக்காலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தவகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைத்த பின்னர் இந்த விவகாரம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது அவர், “இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு தொடர்ந்து தயங்குகின்றது என்று தெரியவில்லை. இது இந்தியாவின் இயலாமையா, அல்லது எம்மீதான அக்கறையின்மையா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. இதனால்தான் இங்குள்ள எமது மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் இந்தியா மீது ஒருவித அவநம்பிக்கையை இன்று கொண்டிருக்கின்றார்கள்” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

“தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் இன்றைய அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து, ஏற்கெனவே அரசியலமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இன்று இந்தியாவுக்கு இருக்கும் அருமையான சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது. இந்தியா இந்த தார்மீகக் கடமையை செய்துதான் ஆக வேண்டும். இந்தியா மீது எனக்கு இன்னமும் இருக்கும் அளவற்ற நம்பிக்கை மற்றும் தொப்புள்கொடி உறவுக்காரன் என்ற அடிப்படையிலேயே எனது இந்தக் கருத்துக்களை நான் உரிமையுடன் முன் வைக்கின்றேன்” என்றும் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியிருந்தார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது. ஆனால், அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கையோ அல்லது அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளோ ஆரம்பிக்கப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்தக் கடிதத்துக்கு இதுவரை ஜனாதிபதி பதில் வழங்கவில்லை. இதிலிருந்து இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்குக் கூட அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லை என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதனைவிட, மாகாண சபைத் தேர்தலைக் கூட உடனடியாக நடத்தும் எண்ணத்தில் அரசாங்கம் இல்லை என்பது தற்போது தெளிவாகி வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தி, அந்தக் கட்டமைப்பை அமுல்படுத்துவதில் கூட அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

இதனால்தான் இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியம் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இனப்பிரச்சினை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவை தவிர்த்து அதனை மேற்கொள்வதென்பது முடியாத காரியமாகும்

ஏனெனில், அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் இந்தியா அக்கறைகொண்டிருக்கின்றது. இதன் காரணமாகத்தான் 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை ஆட்சி உருவாக்கப்பட்டது. அன்று மாகாண சபை முறைமையை தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்திருந்தது. வன்முறைகளிலும் அந்த முன்னணி ஈடுபட்டிருந்தது.

இதேபோன்றுதான் தமிழர் தரப்பிலும் மாகாண சபை முறைமையை சகல தமிழ்க் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைய மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி கூட அதனை ஏற்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை கடிதமும் எழுதியிருந்தது.

ஆனாலும் தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற விடயத்தில் பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் இணக்கம் கண்டிருக்கின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை முற்றாக எதிர்த்து வருகிறது. ஒற்றையாட்சிக்குள் எத்தகைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை என்றும் அந்தக் கட்சி கூறி வருகின்றது.

இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதனை பல்வேறு மட்டங்களிலும் இந்தியா வெளிப்படுத்தியே வந்துள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடிய போதும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயங்களை வலியுறுத்தியிருந்தார். தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே இந்தியா உள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது இருதரப்பு பேச்சுக்களின் போதும் அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். ஆனால், முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நேரடியாகக் கோரும் இந்தியா, தற்போது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் கோரி வருகின்றது.

13ஆவது திருத்தம் என்ற சொல்லை நேரடியாக பயன்படுத்துவதை இந்தியா தவிர்த்து வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பில் இந்த விடயத்தை இந்தியா வலியுறுத்தியிருந்தது.

கடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தின் போது இந்தியா அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுத்துவதுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

ஆனாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு விடயத்திலோ அல்லது மாகாண சபைத் தேர்தல் விவகாரத்திலோ உரிய அக்கறை இதுவரை செலுத்தவில்லை.

இந்த நிலையில்தான் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா உரிய கரிசனை காட்டவில்லை என்று தொனிப்பட கருத்து தெரிவித்திருந்தார். இந்தியா தவறிழைத்து விட்டதாக சுட்டிக்காட்டும் வகையிலேயே அவரது கருத்து அமைந்திருந்தது.

ஆனால், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அதாவது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகளிடையேயே ஒருமித்த நிலைப்பாடு இல்லாத நிலை நீடித்து வருகின்றது. இதனை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கட்சிகள் தமக்குள் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலை வலியுறுத்த வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக காணப்பட்டது.

இதேபோன்றே 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து தமிழ் தேசியக் கட்சிகள் வெறுமனே இந்திய அரசை குறைகூறுவது பொருத்தமற்றதாகும். தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலேயே இந்த விடயத்தில் ஒற்றுமை இல்லாத நிலைமை காணப்படுகின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் கருத்து தெரிவித்திருந்தார். எனவே, தற்போதைய நிலையில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி ஆரம்பக்கட்டத் தீர்வை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் முயல வேண்டும். அதற்கு இந்தியாவும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

2025-11-30 10:32:53
news-image

இன, மத­வா­தத்­துக்கு அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணியக்...

2025-11-23 14:17:58
news-image

அடிப்படைத் தீர்வையாவது பெறுவதற்கு முயலவேண்டும்

2025-11-09 16:18:30
news-image

அரசியல்தீர்வு விடயத்தில் அக்கறைகொள்ள வேண்டும்

2025-11-02 14:47:15
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகள் யதார்த்தத்தை உணர...

2025-10-26 14:09:27
news-image

பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கடப்பாட்டை உணரவேண்டும்

2025-10-12 11:56:26
news-image

சோமரத்னவின் சாட்சியத்தை பெறவேண்டியதன் அவசியம்

2025-10-05 16:41:36
news-image

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டியதன்...

2025-09-28 16:36:03
news-image

ஒன்றிணைவதன் மூலம் உரிய தீர்வை காணலாம்

2025-09-21 12:11:27
news-image

அரசியல்தீர்வு விடயத்தில் இந்தியாவின் மென்போக்கு

2025-09-14 11:25:36
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புடன்...

2025-08-31 12:08:27
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இனியாவது பூர்த்தி...

2025-08-24 10:43:58