களனி ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹரா நிகழ்வின் இறுதிநாள் வீதி ஊர்வலம் இன்று இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு களனியில் இன்று இரவு விசேட போக்குவரத்து முறை செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த பெரஹரா இன்று இரவு 8.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பியகம பாதை வழியாக பயணித்து மீண்டும் பியகம வீதி, வாகல்கடையினூடாக களனி ரஜமஹா விகாரையை வந்தடையவுள்ளது.

இரவு 8.00 மணி முதல் அதிகாலை  1 மணிவரை களனியை அண்மித்த பிரதேசங்களில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பில் இருந்து களனி ஊடாக பியகம பகுதி நோக்கி பயணிக்கும் வாகனங்கள், பேலியகொடை சந்தியில் இருந்து கிரிபத்கொட நோக்கி சென்று சப்புகஸ்கந்தை ஊடாக பியகமவிற்கு செல்ல முடியும்.

பியகமவில் இருந்து வரும் வாகனங்கள், நாகஹமுல்ல சந்தியில் இருந்து வலது பக்கமாக திருப்பி சப்புகஸ்கந்த, மாகொல, கிரிபத்கொட வீதியூடாக கொழும்பு நோக்கி செல்ல முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நேர காலத்திற்குள் தோரன சந்தியினூடாக வராகொடை பாதை ஊடாக களனி நோக்கி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.