ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் இலங்கை

Published By: Vishnu

06 Nov, 2025 | 07:26 PM
image

(நெவில் அன்தனி)

பன்னிரண்டு நாடுகள் பங்குபற்றும் ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் லஹிரு மதுஷன்க தலைமையிலான எழுவர் கொண்ட இலங்கை அணியினர் ஹொங்கொங் சென்றடைந்துள்ளனர்.

இலங்கை அணியில் லஹிரு மதுஷன்க (தலைவர்), தனஞ்சய லக்ஷான், தனுக்க தாபரே, நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரக்கோன், தரிந்து ரத்நாயக்க, சச்சித்த ஜயதிலக்க ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

தயார்நிலை வீரரராக  மொவின் சுபசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் 12 அணிகளும் லீக் சுற்றில் நான்கு குழுக்களில் மோதும்.

டி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் ஹொங்கொங்கை நாளைக்காலை 9.25 மணிக்கும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை பிற்பகல் 12.30 மணிக்கும் எதர்த்தாடும்.

இப் போட்டியில் ஏ குழுவில் ஆப்கானிஸ்தான், நேபாளம், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும் பி குழுவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், சி குழுவில் இந்தியா, குவைத், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் பிரதான நொக் அவுட் சுற்றில் பங்குபற்றும். தொடர்ந்து அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் கிண்ணத்திற்காகவும் தோல்வி அடையும் அணிகள் கோப்பைக்காவும் இறுதிப் போட்டிகளில் மோதும்.

லீக் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் கடைசி இடங்களைப் பெறும் அணிகள் குவளைக்கான நொக் அவுட் சுற்றில் விளையாடும்.  

ஹொங்கொங் புறப்படுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட அணித் தலைவர் லஹிரு மதுஷன்க,

'இந்த வருட ஹொங்கொங் சிக்சஸ் சுற்றுப் போட்டியில் சிறந்த வீரர்களுடன் பலம்வாய்ந்த அணிகள் பங்குபற்றுகின்றன. அந்த அணிகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளை ஈட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளோம்' என்றார்.

'நாங்கள் இந்த சுற்றுப் போட்டியை நல்ல மனோநிலையுடன் எதிரகொள்கிறோம். ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் 14 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நாங்கள் பங்குபற்றி சம்பியனாகி இருந்தோம். அப்போது எங்களது அணியின் பலத்தை மற்றைய அணிகள் அறிந்திருக்கவில்லை. ஆனால், நாங்கள் சம்பியனானதை அடுத்து ஏனைய அணிகள் எங்களது அணி குறித்து கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வுகளை நடத்தியிருப்பர் என நாங்கள் நினைக்கிறோம். எனவே இம்முறை சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அவற்றை முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

'கடந்த வருடம் விளையாடிய 7 வீரர்களில் ஆறு பேர் இந்த வருட அணியிலும் இடம்பெறுகின்றனர். புதிய வீரரகாக சச்சித்த ஜயதிலக்க இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார. அவர் ஒரு சிறந்த சகலதுறை வீரர் ஆவார். பொதுவாக இலங்கை அணியில் இடம்பெறும் அனைவரும் சகலதுறை வீரர்களாவர்' என அவர் மேலும் கூறினார்.

ஹொங்கொங் சிக்சஸ் போட்டிகள் யாவும் மொங் கொக் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெறும்.

ஒவ்வொரு அணியும் 6 பந்துகளைக் கொண்ட 6 ஓவர்களை லீக் மற்றும் நொக் அவுட் சுற்றுகளில் எதிர்கொள்ளும். விக்கெட் காப்பாளரைத் தவிர நால்வர் தலா ஒரு ஓவரும்,  ஒரு வீரர் 2 ஓவர்களும் வீசுவார்.

துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததும் ஓய்வுபெறுவார். தேவைப்படின் அவர் மீண்டும் துடுப்பெடுத்தாட அனுமதிக்கப்படுவார். 6 ஓவர்கள் பூர்த்தி அடைவதற்கு முன்னர் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டால் ஆறாவது வீரருக்கு மாத்திரம் தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியும். மறுபக்கத்தில் ஐந்தாவதாக ஆட்டம் இழந்தவர் ஓட்டங்களை எடுப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஹொங்கொங் சிக்சஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு இலங்கை சம்பினாகி இருந்தது.

இறுதிப் போட்டி நாயகன் விருதை தனஞ்சய லக்ஷானும் தொடர் நாயகன் விருதை தனஞ்சய லக்ஷானும் வென்றெடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26