மெட்ராஸ் சுப்பர் கிண்ணம் 2025 : 19 வயதின் கீழ் புட்சால் போட்டியில் கலம்போ கிக்கர்ஸ் இரண்டாம் இடம்

04 Nov, 2025 | 06:01 PM
image

(நெவில் அன்தனி)

எவ்சி மெட்ராஸ் அக்கடமி என்ற மெட்ராஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெட்ராஸ் சுப்பர் கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட புட்சால் போட்டியில் கலம்போ கிக்கர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

மெட்ராஸ் சுப்பர் கிண்ணத்தில் 11, 13, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான போட்டிகள் புறம்பாக நடத்தப்பட்டன.

எனினும் புட்சால் போட்டியில் மாத்திரமே கலம்போ கிக்கர்ஸ்  பங்குபற்றியது.

கலம்போ கிக்கர்ஸ் தனது முதலாவது போட்டியில் FCM எமெர்ஜிங் அணியை 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

தொடர்ந்து சேது FC உடனான போட்டியிலும் 5 - 3 என கலம்போ கிக்கர்ஸ் வெற்றிபெற்றது.

எனினும் XIFT அணியுடனான கடைசிப் போட்டியில் கலம்போ கிக்ர்ஸ் 3 - 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்றாலும் அணிகள் நிலையில் இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றதால் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதின.

இறுதிப் போட்டியின் முதலாவது பகுதியில் XIFT அணி 3 கோல்களைப் புகுத்தி முன்னிலையில் இருந்தது.

ஆனால், இடைவேளையின் பின்னர் ஆக்ரோஷத்துடன் விளையாடிய கலம்போ கிக்கர்ஸ் 3 கோல்களைப் புகுத்தி கோல் நிலையை 3 - 3 என சமப்படுத்தியது.

அதன் பின்னர் இரண்டு அணிகளுக்கும் வெற்றி கோலை போட முடியாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 2 - 0 என XIFT அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இந்த சுற்றுப் போட்டியில் கலம்போ கிக்கர்ஸ் அணி சார்பாக ஐசாக் ஒக்கோரோ 8 கோல்களையும் சமுவெல் 4 கோல்களையும் அலெக்ஸ் கொச்,  2 கோல்களையும் ஜொநதன் டெனியல் ஒரு கோலையும் போட்டனர்.

சுற்றுப் போட்டியில் ஐசாக் ஒக்கோரோ அதிசிறந்த வீரர் விருதையும் ஷஹீர் ரியாத் அதிசிறந்த பயிற்றுநர் விருதையும் வென்றெடுத்தனர்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற கலம்போ கிக்கர்ஸ் அணியில் ஹெனியல் பெஞ்சமின், அலெக்ஸ் கொச், டேவிட் ஒக்கோரோ, ஐசாக் ஒக்கோரோ, ஜோநதன் டெனியல், கவிந்து மஹாசருக்காலிகே, எல்மி ஸ்ரீஸ்கந்தராஜா, சமுவெல் நிக்கல்சன், ஜோநதன் மெத்யூஸ், ஷஹித் ஹனிப் ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்