இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமிந்த வாஸ், தனது ஓய்வுக்குப் பின்னர்  2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் அதன்பின் 2013 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி வரை அயர்லாந்து அணி சமிந்த வாஸை பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.

இது குறித்து சமிந்த வாஸ்  கருத்து வெளியிடுகையில், 

“அயர்லாந்து அணியில் திறமையான மற்றும் அனுபவமுள்ள வீரர்கள் உள்ளனர். என்னால் அவர்களுக்கு கூடுதலாக வலுச்சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அயர்லாந்து அணியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அணிக்காக சமிந்த வாஸ், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  355 விக்கெட்டுகளையும் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும் 6 இருபதுக்கு - 20 போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.