இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியம் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, பிரித்தானியா உட்பட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இந்த விடயத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக்கை சந்தித்து பேசிய சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளான கலாநிதி ஜெஹான் பெரேரா உட்பட்டோர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விவகாரத்திலும் அரசாங்கம் காலதாமதம் காண்பித்து வருவதனால் அவற்றை முன்னெடுப்பதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோன்றே அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து பேசிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வின் அவசியம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசரம் என்பவை குறித்து வலியுறுத்தியிருந்தனர்.
இதேபோன்றே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வோல்ற்றை இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சந்தித்து பேசிய போதும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அண்மைக்காலமாக அக்கறை செலுத்தி வருகின்றது. இலங்கை சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்த நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன குறித்து இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான செயலமர்வு கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டது.
இந்த செயலமர்வின் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாரச்சி, நிலந்தி கொட்டஹச்சி, சமன் மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுள, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்புச் செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் செயலமர்வின் போது சுவிட்சர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாக புரிந்து கொள்ளல் ஆகிய தலைப்புகளில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புகளுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்தச் செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபு மீளக் கொண்டுவரப்படும் எனவும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் என அரசியல்கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வோல்ற்றை கடந்த 29ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக அண்மையில் சுவிட்சர்லாந்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் கூறியதாக சுவிட்சர்லாந்து தூதுவர் சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் தான் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதுடன் அது தொடர்பிலான செயலமர்வையும் தனது நாட்டில் நடத்தியுள்ளமை பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். அந்த செயலமர்வில் கலந்துகொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க உட்பட்ட பிரதிநிதிகள் அரசியல் தீர்வு தொடர்பில் தெரிவித்த கருத்துக்களும் பாராட்டத்தக்கன.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகளை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதியாக அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியானது சுட்டிக்காட்டியிருந்தது. இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வு காணப்படும் என்றும் அது வரையில் மாகாண சபை ஆட்சி முறைமை அமுலில் இருக்கும் என்றும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது.
ஆனால், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகின்ற போதிலும் இன்னமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான எத்தகைய முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ஆனாலும், சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து அரசியல் கட்சிகளின் திருத்த யோசனைகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அவரது இந்தக் கூற்று உண்மையானதா? என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.
ஏனெனில், உள்நாட்டில் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதிக்கு அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் அதற்கான பதில் இன்னமும் வழங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் நினைவூட்டி குறுஞ்செய்தியும் சுமந்திரனால் அனுப்பப்பட்டிருக்கின்றது. அதற்கும் பதில் இல்லாத நிலையே நீடிக்கின்றது.
இதிலிருந்து இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. தற்போதைய நிலையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பிலோ அல்லது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தோ கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
இந்த நிலையில்தான் அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேச சமூகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்து வருகின்றது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அழுத்தங்களை கொடுக்கும் வகையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பிரேரணைகளில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
எனவே, அரசாங்கமானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் இழுத்தடிப்புகளை மேற்கொள்ளாது இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகமும் அக்கறை செலுத்த வேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM