இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் மற்றும் பிளெக் கெட் கஃபே இணைந்து பிரான்ஸ் புகைப்படக் கலைஞரான செட்ரிக் கெடிலோனின் மாபெரும் புகைப்படக் கண்காட்சியை இம் மாதம் இலங்கையில் நடாத்தவுள்ளது.

இக் கண்காட்சியானது இம் மாதம் 15 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு 7 இல் அமைந்துள்ள பிளெக் கெட் கஃபேயில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக தங்கியிருந்து இலங்கை மக்களின் சாதாரண வாழ்க்கை, உணவுப்பழக்க வழக்கங்கள், தொழில், ஓய்வு நேரங்கள் என்பனவற்றை தத்ரூபமாக புகைப்படமாக்கி யதார்த்ததுடன் இணைக்கும் முயற்சியாகவே இப் புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கை வாழ் மக்களின் தனித்துவங்கள் கலை, கலாசாரங்களை எந்தவொரு அரசியல் தலையீடுகள் இன்றி பார்வையாளர்களின் மூலம் அறிந்துகொள்ள தான் விரும்புவதாக செட்ரிக் கெடிலோனின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.