இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாஸ் உத்தரவிட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 49 பேரையும் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 49 மீனவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய 12 மீன்பிடிப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தமிழகத்தின் தங்கச்சிமடம், புதுச்சேரி, ஜகாதாப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.