வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கணேசபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி இன்று மதியம்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மரக்காரம்பளை  கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நாம் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய நாம் 2004 ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்று தொடக்கம் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

அத்துடன் மழை காலங்களில் இடம்பெயர்வுகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது. அத்துடன் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.