மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் அக்கறை செலுத்துமாறும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அதேபோன்றே தெற்கிலும் எதிரணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்களும் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தெற்கிலும் வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கொழும்பில் பெருமளவான கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி மாகாண சபைத் தேர்தலை உடனடியாக அரசாங்கம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இதேபோன்றே வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் அதிகாரப் பகிர்வு குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று கோரி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். 5 கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு கோரி தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இத்தகைய கூட்டங்களை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இதுவரை நடத்தியிருக்கின்றது. இந்தக் கூட்டங்களில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
கடந்த வாரம் வட,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., சமத்துவக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பவற்றின் தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்த மாத ஆரம்பத்தில் வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினால் மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் உட்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்களும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு குறித்து கலந்துரையாட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதுடன் அதிகாரப் பகிர்வினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன ஒரே நிலைப்பாட்டிலேயே நிற்கின்றன. ஆனால், இந்த விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாற்று நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது.
13ஆவது திருத்தம் தீர்வல்ல. அதனை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் ஏனைய கட்சிகளுடன் இணங்காத தன்மையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்றது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு தமிழ் தேசியப் பேரவையாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், புதிய அரசியல் யாப்பினை உருவாக்க அரசாங்கம் முயன்றால் அதில் சமஷ்டித் தீர்வை உள்ளடக்குவது தொடர்பில் ஒன்றிணைந்து வலியுறுத்துவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டிருந்தது.
13ஆவது திருத்தத்தை நிராகரிக்கும் கொள்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருந்த போதிலும் அது குறித்து பேசாது, புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் போது சமஷ்டி தீர்வை வலியுறுத்துவதற்கு இரு தரப்பும் இணக்கம் கண்டிருந்தன.
தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை தேர்தலை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வலியுறுத்தும் விடயத்தில் மாற்று நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்து வருகின்றது. இதனால் தமிழ்த் தேசியப் பேரவையாக செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையில் முரண்பாடான நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபையை எதிர்க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்புகிறது. மாகாண சபை முறைமையில் எதுவும் இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்காகவே இவ்வாறு தாம் தேர்தலில் போட்டியிடுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம் அளித்தும் வருகின்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக அரசாங்கம் நடத்த வேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக உள்ளது. இதற்காக கடந்த பாராளுமன்றத்தில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தனி நபர் பிரேரணையை முன்வைத்திருந்தார். தற்போது இந்தப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருக்கின்றார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை ஒன்றிணைந்து கொடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராக இருக்கின்றது.
தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் விடயத்தில் கூட அரசாங்கம் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலையாவது நடத்துமாறு அழுத்தம் கொடுத்து அதன்மூலம் அதிகாரப் பகிர்வில் அரசாங்கத்தை அக்கறைகொள்ளச் செய்ய வேண்டும் என்ற விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் உறுதியாக உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை அந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொள்வது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகவே காணப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், ஒருமித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கி வருகின்றது. ஏனெனில், தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கில் ஊடுருவியுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு பெருமளவான தமிழ் மக்கள் வாக்குகளை வழங்கியிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை தமிழ்த் தரப்பு கைப்பற்றப்பட வேண்டுமானால் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் காணப்படுகிறது. இந்த விடயத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஏனைய தரப்புக்களுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளது. பகிரங்கமாகவே அவர்கள் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றனர்.
ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட தயாராகியிருக்கின்றது. ஆனால், ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேசுவதென்றால் கட்சியின் உயர்மட்டம் கூடி ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒன்றிணைந்து போட்டியிட முன்வருமா என்ற விடயம் பெரும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. ஆனாலும், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிடாவிட்டால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் விடயத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் இதற்கு நல்ல உதாரணமாக அமைந்திருக்கின்றது. எனவே, இந்த படிப்பினையிலிருந்து பாடங்களைக் கற்று இனியாவது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM