ஏஷ்லி, அனாபெல் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் ஆஸியை வெல்ல வைத்தன; இங்கிலாந்துக்கு முதலாவது தோல்வி

Published By: Vishnu

22 Oct, 2025 | 10:49 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவின் இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது.

ஏஷ்லி கார்ட்னர் ஆட்டம் இழக்காமல் குவித்த அபார சதம், அனாபெல் சதர்லண்ட் ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவின்  வெற்றியை இலகுவாக்கின.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் தோல்வி அடையாமல் இருந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9.3 ஓவர்கள் மிதமாக இருக்க 4 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 11 புள்ளிகளுடன்  அவுஸ்திரேலியா  மீண்டும் முதலாம் இடத்தை அடைந்தது.

அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது 16ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியா பலத்த அழுத்தத்தை எதிர்கொண்டது.

ஆனால், அனாபெல் சதர்லண்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 148 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

இந்தப் போட்டியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஏஷ்லி கார்ட்னர் 72 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

முதல் 50 ஓட்டங்களுக்கு 47 பந்துகளை எதிர்கொண்ட ஏஷ்லி கார்டனருக்கு அடுத்த 50 ஓட்டங்களைப் பெற வெறும் 22 பந்துகளே தேவைப்பட்டது.

அவர் 73 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகளுடன் 104 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவருக்கு பக்கபலமாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அனாபெல் சதர்லண்ட் துரதிர்ஷ்டவசமாக 2 ஓட்டங்களால் சதத்தைப் பூர்த்திசெய்யத் தவறினார்.

112 பந்துகளை எதிர்கொண்ட அனாபெல் சதர்லண்ட் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர்களைவிட பெத் மூனி 20 ஓட்டங்களையும் எல்சி பெரி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

அமி ஜோன்ஸ், டமி போமொன்ட் ஆகிய இருவரும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அமி ஜோன்ஸ் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த ஹீதர் நைட் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணித் தலைவி நெட் சிவர் - ப்ரன்ட் வெறும் 7 ஓட்டங்களையே பெற்றார். (105 - 3 விக்.)

சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டமி போமொன்ட் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 78 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

எம்மா லாம்ப் (7), சொஃபியா டன்க்லி (22) ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து (166 - 6 விக்.) சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், அலிஸ் கெப்சி (38), சார்ளி டீன் (26) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 227 ஓட்டங்களாக உயர்த்தி அதே எண்ணிக்கையில் இருவரும் ஆடுகளம் விட்டகன்றனர்.

சொஃபி எக்லஸ்டோன் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகி: அனாபெல் சதர்லண்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன்...

2026-09-15 14:49:55
news-image

சாதனை வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த...

2026-09-15 13:52:00
news-image

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் :...

2026-09-15 13:36:58
news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41
news-image

சுப்பர் லீக்கில் முதல் சுற்றை வெற்றியுடன்...

2026-09-13 13:46:46
news-image

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை?...

2026-09-13 13:20:59
news-image

பாகிஸ்தானுடனான 3ஆவது டெஸ்டில் 8 விக்கெட்களால்...

2026-09-13 01:42:52