ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியான `முதல்வன்' படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999ல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `முதல்வன்'. அர்ஜுன், ரகுவரன், மனீஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன், ரகுவரன் இடையே நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்தியில் `நாயக்' என்ற பெயரில் வெளியானது. அதில் அனில் கபூர், ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  

இந்நிலையில், `முதல்வன்' படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது தயாராகியிருக்கிறது. `பாகுபலி' இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி. விஜயேந்திர பிரசாத் `முதல்வன்' படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

`முதல்வன்' படத்தின் இரண்டாவது பாகத்தையும் ஷங்கர் இயக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் விஜயேந்திரப் பிரசாத் கூறியிருக்கிறார். 

இந்நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அர்ஜுன் நடிப்பாரா? அல்லது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த் அல்லது விஜய் இப்படத்தில் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினி, விஜய் இருவரில் ஒருவர் நடிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும். 

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் `மெர்சல்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கும் விஜயேந்திர பிரதாத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.