(மா.உஷாநந்தினி)
இலக்கிய உலகில் நீண்டகாலமாக நடைபோட்டு வரும் பாத்திமா நளீராவின் கனவுப் படைப்பாகவும் முதல் நூலாகவும் “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு கடந்த 12ஆம் திகதி வெளியானது.
கவிதாயினி தனது சிந்தனைப்பரப்பை விரிவாக்கி, உணர்வுகளை தட்டியெழுப்பக்கூடிய சொற்களைக் கோர்த்து, காத்திரமாக ஆக்கப்பட்டுள்ள கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
எளிய வசனங்களை அமைத்து, அதை வரிகளாக உடைத்து, “இதுதான் கவிதை” என்று சொல்லிவருகின்ற கலியுகக் கவிஞர்களுக்கு மத்தியில், தரத்தில் குறைவில்லாத தொகுப்பாக “ஏழாம் வானத்தின் சிறகுகள்” உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் உள்ள கவிதைகள் பல, எளிய வாசகர்களையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இனி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரிகளைப் பார்ப்போம்.

“துன்ப காலத்தில் எழுந்த கவிதைகள் நிஜத்தை பேசும். வலியைப் பேசும். பூசி மெழுகாத மொழிநடையுடன் கவிதை உருவாகும். கவலைகளிலிருந்து வெளியேற அதுவே பாலமாகவும் அமையும்” என்ற கருத்தினை சட்டத்தரணியும் கவிதாயினியுமான அம்பிகை அண்மையில் ஒரு பேட்டியின்போது என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
சில கவிஞர்கள், துன்பத்திலும் துயரத்திலும் அடிபட்டுப் பிறக்கின்ற கவிதைகள் காலம் கடந்தும் மனித மனங்களில் நடமாடிக்கொண்டே இருக்கும் என்று நம்புகிறார்கள்.
"உலகம் வியந்து போற்றும் எம் கவிதைகள் எல்லாம் எம் துயர காலங்களில் கண்ணீரோடு எழுதப்பட்டனவே" என்று ஆங்கில புரட்சிக் கவிஞர் ஷெல்லி சொல்வாராம்.
அவ்விதமான கவிதையொன்றையே தனது தொகுப்பில் முதலாவதாக வைத்திருக்கிறார் பாத்திமா நளீரா.
“வானத்தைக் கொத்தும் கழுகுகள்” என்ற கவிதையை, போரையும் மனித அவலத்தையும் வெறுக்கின்ற மனதோடு,
கானல் நீரால்
தலையை துவட்டிக் கொண்டார்கள்
ஆனால்...
உடம்பிலிருந்து வழியும்
இரத்தத்தில்
காஸாவின் வீரவாசம் இருந்தது... என்ற வரிகளைக் கொண்டு தொடங்குகிறார்.
துயரத்தை விரும்பாத சாதாரண மனிதர்கள்தான் என்றாலும், கவிஞர்கள், கவிதைகள் சிறக்க, சோக ரசத்தையே அதிகம் நாடவேண்டியிருக்கிறதா, அல்லது உலகத் துயரச் சம்பவங்கள் அவர்களை அவ்விதம் எழுதத் தூண்டுகின்றனவா? இந்தக் கேள்வி தொக்கி நின்றாலும், வரிகள் சிறப்பு.
“அழும் ஒலிவ் மலைகள்” என்றொரு கவிதையும் பாலஸ்தீன அவலத்தைச் சொல்கிறது. ஒலிவ் மலை - இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஒரு மலைத்தொடர். இது கவிதைகளில் ஆங்காங்கே ஒரு குறியீட்டுச் சொல்லாக பிரயோகிக்கப்படுகிறது.
“பலஸ்தீனத்தை
மீண்டும்
அழகாக
வரைந்துகொள்வோம்
நாங்கள்
புற்களை உண்டு
மீண்டும்
மரமாக வளர்வோம்”
என்ற வரிகளை பலஸ்தீனம் கடந்து சிந்தித்துப் பார்த்தால், வாழ்க்கையில் வீழ்ந்தாலும் மீண்டெழுவதற்கான ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது.
“ஒருநாள் நீங்கள்
எனைக் கொண்டாடுவீர்கள்
அப்போது
நானும் எனது கவிதையும்
கல்லறைக்குள்
உரையாடிக்கொண்டிருப்போம்” என்றொரு கவிதை தொடர்கிறது.
எழுத்தாளர்கள், குறிப்பாக கவிஞர்கள் வாழும் காலத்தில் மதிக்கப்படவேண்டியவர்கள், அங்கீகரிக்கப்படவேண்டியவர்கள். அது, அந்தந்த காலகட்டத்துக்குத் தேவையாகிறது. இந்த அங்கீகாரம் கவிஞர்களை இன்னும் இன்னும் அதிகமாக சிந்திக்கவும் செயலாற்றவும் தூண்டும். காலம் கடந்த மதிப்பும் அங்கீகாரமும் யாருக்குப் பயனளிக்கும் என்பதை கடுமையாக உணர்த்தியிருக்கிறார் கவிதாயினி.
ஆன்மிகத்தையும் அறிவியலையும் சீர்தூக்கிப் பார்ப்பதாகவும் சில வரிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன..
நான்
எந்த உலகைத்தான்
முதுகில் சுமந்துகொள்வேன்...?
ஞானிகள் கண்ட உலகத்தையா
விஞ்ஞானிகள் கண்ட உலகத்தையா
நான் முதுகில் சுமக்கும்
உலகிற்குத்தான் எத்தனை நிறங்கள்... எனக் கேட்கிறார்.
இக்கவிதைத் தொகுப்பில் கவிதாயினியின் மனசாட்சியின் குரலாக ஒரு கவிதை பட்டுத் தெறிக்கிறது.
கொத்துக் கொத்தாய்
வார்த்தைகளை
என் மனக் கூந்தலில்
முடிந்துகொள்ள
வாசனைக்கென்று - சில
உவமான உவமேயத்தை
மலர்களால்
சூடிக்கொண்டேன்
என் கவிதையில்...
வாசனை இல்லையென்று...
எந்த நக்கீரனாவது...
வந்து சொல்லட்டும்...
எனது
பேனாவின்
நெற்றிக் கண்ணை
திறந்துவிடுகிறேன்...
தன் புலமை மீது, எழுத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு இயல்பாகத் தோன்றக்கூடிய ரௌத்திரம், கோபம் என்பது நக்கீரனுக்கு மட்டுமல்ல, நளீரா போன்ற எழுத்தாற்றல் நிரம்பிய எவருக்கும் ஏற்படக்கூடியதுதான்!
ஏழையென்றாலும், வாழ்வது குடிசை என்றாலும், அந்தக் குடிலின் கதவு பழைமையானது. பழைமையைப் பாதுகாக்க தன் கட்டைவிரலையும் இழக்கத் தயாராகிவிட்ட ஒரு கதாபாத்திரம், கறையான்களோடு இப்படிப் பேசுகிறது.
உங்கள் வித்தைகளுக்கு
காணிக்கையாக
எனது
கட்டை விரலையென்றாலும்
அரித்துக் கொள்ளுங்கள்
கதவை விட்டுவிடுங்கள்.
பழைமைக்கும் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறும் சமுதாயக் குழுக்கள் சிந்திக்கவேண்டிய விடயத்தை இக்கவிதை நினைவூட்டுகிறது.
அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” என்ற கவிதை முதலிடத்தைப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையும் கவிதைத் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டதோடு, இந்நூலுக்கான பெயராகவும் அமைந்துவிட்டது.
வழக்கம்போல் உள்ளடக்கத்திலிருந்து ஒரு தலைப்பை உருவி, நூலுக்குப் பெயரிட்டிருந்தாலும், இதுவும் கனதியான கவிதைதான்.
குறிப்பாக,
ஏழாம் வானத்தின் சிறகை
என்னிடமே தந்துவிடுங்கள்
நான் மேலே பறக்க வேண்டியுள்ளது
என்ற வரிகளை வாசிக்கின்றவேளையில், அண்மையில் நான் கேட்டு ரசித்த,
விழுந்த பின்னும்
பறக்கப் பார்க்கிறது
பறவையின் இறகு... என்றொரு குட்டிக்கவிதையும் சிந்தனையில் வந்துபோகிறது.
“சிறகுகள்” தன்னம்பிக்கை, விடாமுயற்சி, விடுதலை போன்றவற்றின் அடையாளமாக, நளீராவின் அதிகப்படியான கவிதைப் பக்கங்களில் பறந்து திரிகிறது. வாழ்தலுக்கான நம்பிக்கையை உணர்த்தும் “சிறகுகளைக்” கொண்ட தலைப்பு வாசகரிடத்தில் நேர்மறை எண்ணத்தை விதைக்கிறது என்றே சொல்லவேண்டும்.
“நான் யசோதரை அல்ல...” என்றொரு கவிதை... விலகிச் செல்ல ஒரு நபர் - ஓர் ஆண் முடிவெடுத்துவிட்டால், அவனைக் கடந்து செல்லவும் ஒரு பெண், நினைத்தால் துணிந்துவிடுவாள். இதை சுட்டிக்காட்டும் விதமாக,
நேற்றைய மகிழ்ச்சி
இன்றில்லை - எனினும்
இன்றைய துயரத்தை
நாளைய பொழுதினுள்
எதிர்த்து வெல்வேன்
ஆனால்,
நீ சித்தார்த்தன் போன்று
ஒரு சில நாழிகை வந்து செல்லலாம்
என்றாலும்
நான்
யசோதரை அல்ல
ஒரு கேள்வியும் கேட்கமாட்டேன்
எனத் தொடரும் கவிதாயினி, புத்தனை - சித்தார்த்தனை அறிந்தவர்கள், சித்தார்த்தனின் மனைவி யசோதரையை புரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை. வரலாறு பெண்களையும் கொண்டாடவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.
குரங்கிலிருந்து
பிறந்த மாதிரியே
எல்லாப் பக்கங்களிலும்
தாவித் தாவி
கதிரையுடன்
மல்லுக்கட்டும் இவர்கள்
வாக்குறுதியில்
யாசகனுக்குக் கூட
குண்டு துளைக்காத
சட்டையைக்
கொடுத்தாலும் கொடுப்பார்கள் என தேர்தல் களத்தில் போட்டியிடுபவர்களை ஏளனம் செய்கிறார்.
இவர்கள்
வாய் என்ன
வட்டிக்கடையா - இப்படி
குட்டி போடுகிறது? என அரசியல்வாதிகளை வேடிக்கையாகச் சித்திரிக்கிறார்.
“ஒரு கூடை நிறையப் பாடல்” என்ற கவிதையில் தான்சேன், சின்ட்ரெல்லா, மோனாலிசா, மோனாலிசாவை வரைந்த லியனார்டோ டாவின்சியும் பிகாசோ கலீல் ஜிப்ரான், சிக்மண்ட் பிரைட் என உலகப் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், கற்பனைக் கதாபாத்திரங்கள் வந்துபோவதைப் பார்க்க முடிகிறது.
ஒரே சாயலில் இரு கவிதைகள் வெவ்வேறு கற்பனைகளில் எழுதப்பட்டிருப்பதையும் இத் தொகுப்பில் காண முடிகிறது. “மொழி மனிதன்”, “மின்மினிப் பூச்சிகள்” இவ்விரு கவிதைகளிலும் நட்சத்திரங்களும் மின்மினிப் பூச்சிகளும் மாறிமாறி மின்னுகின்றன. இவை மட்டுமல்லாது, வானம், சிறகு, ஆன்மா, நிலவும் கூட பக்கம் பக்கமாக கவிதைகளுக்குள் பயணிக்கின்றன.
“பணக்கார நாய்” என்றொரு கவிதையில் பணக்கார வீட்டு நாய்கள், ஏழைவீட்டு நாய்கள், தெருநாய்களைக் கூட கதாபாத்திரங்களாக வடித்திருக்கிறார்.
பணக்கார நாயின்
எஜமானர் வந்தார்...
தெரு நாய்களைப் பார்த்து
ஆங்கிலத்தில் திட்டித் தீர்த்தார்...
தெரு நாய்களுக்கு ஒன்றும் புரியவில்லை
எது நாய்
எது எஜமானர் என்று...
இதை வாசிக்கிறபோது கு.அழகிரிசாமியின் “வெறும் நாய்” என்ற சிறுகதை, அந்த சிறுகதையில் வருகிற மருத்துவர், அவர் வீட்டுப் பணக்கார நாய், குடிசைவாசி முனுசாமி, அந்த குடிசைவீட்டு “வெறும் நாய்”தான் நினைவுக்கு வருகிறது.
இன்னும் பற்பல கவிதைகள் தொகுப்பில் உள்ளடங்குகின்றன. 200 பக்கங்களில் நீண்ட கவிதைகள், சின்னஞ்சிறு கவிதைகள் வாசகர்களின் ரசனைக்கேற்ப வரிக்கப்பட்டிருக்கின்றன.
கவிதைகள், காலத்தைக் கடந்து வாழ்பவை. வாசித்து அனுபவியுங்கள்!



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM