யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்றைய தினம் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 10 பேரை கைதுசெய்துள்ளனர்.

கடந்த காலங்களில் வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் பிரச்சினைகள் மற்றும் அவற்றோடு தொடர்புபட்ட பொலிஸாருக்கும் மணல் கடத்தல் காரர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யும் வகையில் தொடர்ச்சியாக திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் அதிகாலை முதல் இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது குறித்த 10 பேரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய தினம் மாலை, கோண்டாவில் பகுதியில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தத்தவறிய குற்றிச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்கள்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக கொழும்பில் இருந்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பிரிவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறித்த குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களை கைதுசெய்து அவர்கள் கைதுசெய்யப்படும் பகுதிக்கான பொலிஸ் நிலையங்களின் ஊடாக நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.