இந்திய அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறி அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

கடந்த 3 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்களை இழந்து 622 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

நேற்றைய 2 ஆம் நாள் ஆட்டநேர இறுதியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஒரு விக்கெட்டை இழந்தது.

இந்நிலையில் தெடர்ந்து இன்று 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து இலங்கை அணி மதிய நேர இடைவேளையின் முன்னர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு தாக்கு பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்களையும் பறி கொடுத்து 183 ஓட்டங்களை பெற்றது.

439 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ள இந்திய அணி ஃபோலோஒன் செய்து 2ஆவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாட இலங்கையை அழைத்துள்ளது.