இலங்கை விவகாரத்தை ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் மேலும் இரண்டு வருட காலம் நீடிக்கும் வகையிலான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி, கடந்த 08ஆம் திகதியுடன் நிறைவடைந்திருக்கின்றது.
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் ‘‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’’ எனும் தலைப்பில் புதிய பிரேரணை கடந்த 6ஆம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணையை அரசாங்கம் நிராகரித்ததுடன் அதற்கான விளக்கத்தையும் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக அளித்துள்ளார்.
புதிய பிரேரணை தொடர்பாக கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல்திட்டத்தின் நம்பகத்தன்மை, அச்செயல்திட்டம் இயங்கும் விதம் மற்றும் அதற்கான நிதியொதுக்கீடு என்பன தொடர்பில் நாம் நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வருகின்றோம்.
அந்த செயல்திட்டத்தின் மூலம் இலங்கை மக்கள் எவ்வகையிலும் நன்மையடையவில்லை. மாறாக, அத்திட்டம் இலங்கையர்களின் இன ரீதியில் பிளவுபடுத்தவும், துருவமயப்படுத்தவும் வழிகோலுகின்றது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
புதிய பிரேரணையை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் அந்தப் பிரேரணை மனிதஉரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணையானது கடந்த மாதம் இணை அனுசரணை நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அது குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.
இதன்போது பிரேரணையில் பல்வேறு திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அந்தத் திருத்தங்களில் சில விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்தான் பிரேரணையானது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
பிரேரணை தொடர்பில் திருத்தங்களை முன்வைத்து விட்டு அதனை அரசாங்கமானது நிராகரித்திருக்கின்றது. இந்தப் பிரேரணையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும் உறுதிபட தெரிவித்திருந்தார்.
புதிய பிரேரணையானது உள்ளக விசாரணையின் கீழ் பொறுப்புக்கூறலை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கையை மேலும் நீடிப்பதற்கு இந்தப் பிரேரணை வழிவகுத்திருக்கின்றது.
ஆனால், இந்தப் பிரேரணையானது சர்வதேச விசாரணையையோ அல்லது சர்வதேச பொறிமுறையையோ உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவில்லை. இதனைக் கூட அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமையானது பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் நம்ப முடியாது என்ற நிலைப்பாட்டையே தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கின்றது.
ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்பில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுவரையில் 09 இற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால், இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் அந்தப் பிரேரணைகளை நிராகரித்தே வந்துள்ளன. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் 30/1 தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அந்தத் தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் அனுசரணை வழங்கியிருந்தது. ஆனாலும் அந்தப் பிரேரணையைக் கூட உரிய வகையில் நிறைவேற்றக் கூட நல்லாட்சி அரசாங்கமும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
தற்போது தேசிய மக்கள் அரசாங்கமானது தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சி பீடம் ஏறியுள்ளமையினால் பொறுப்புக்கூறல் விடயத்தில் மாற்று நிலைப்பாட்டை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டனவோ அந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது தலைமையில் இடைக்கால அரசாங்கம் பதவியேற்றிருந்தது. அந்த வேளையில் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51/1 பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்திருந்தது.
ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் ஆதாரங்களைத் திரட்டும் செயல்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையான எதிர்த்திருந்தது.
அதேபோன்றுதான் தற்போதும் புதிய பிரேரணையை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கை தொடர்பிலும் விசனம் வெளியிட்டிருக்கின்றது.
நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணை தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். அமைச்சர் சந்திரசேகர் புதிய பிரேரணையை அரசாங்கம் கவனத்தில் எடுக்காது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உள்ளக விசாரணையின் மூலம் பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதி வழங்கப்படும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கமும் கூறி வருகின்றது. ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையிலும் இதற்கான உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் வெறும் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றதே தவிர எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.
காணாமல் போனோர் விவகாரமாக இருக்கலாம், அரசியல் கைதிகள் விடயமாக இருக்கலாம், காணி சுவீகரிப்பு விடயமாகலாம் எந்த விடயத்திலும் உரிய தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால்தான் உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையே அவசியம் என்று தமிழ்த் தரப்பில் தற்போது கோரப்பட்டு வருகின்றது. ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தினால் எந்தவிதப் பயனும் இல்லை என்று தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவிக்கும் நிலைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்து வருகின்றார். இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்கள் வழங்கப்பட்டு, இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தி வருகின்றார்.
இதேபோன்றே, கடந்த 16 வருடங்களாக காணாமல் போன தமது உறவுகளை தேடி அலைந்துவரும் தமிழ் மக்களும் உள்ளக விசாரணை மீது வெறுப்படைந்த நிலையில் சர்வதேச விசாரணையை கோரி வருகின்றனர். ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் தமக்கு எந்தப் பயனும் இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
ஒருபக்கம் அரசாங்கமானது ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை நிராகரித்துள்ளது. அதேபோன்றே பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரில் ஒரு பகுதியினரும் அந்தப் பிரேரணையை நிராகரிக்கின்றனர். அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இத்தகைய செயற்பாடுகள் சாத்தியமா என்ற விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு ,பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடப்பாடுள்ளது. ஏனெனில், தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றே இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளது. எனவே, இனியாவது அரசாங்கம் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM