வடக்கு, கிழக்கு இணைப்பு சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் நான் அறிந்திருக்கவில்லை ஆனால் நான் இந்த விடயம் தொடர்பாக பேசியதன் அடிப்படையில் அறிந்து கொண்டிருப்பதாவது சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள்  என்னும் அடிப்படையில் அதனை  “ஏக்கிய றட்ட” என சொல்ல பார்க்கிறார்கள்.

ஆனால் அதனை ஒற்றையாட்சி எனவும் எடுக்கலாம் குறிப்பாக அதற்கு வியாக்கியானம் கொடுக்கையில் எல்லோரையும் சேர்த்து என அர்த்தப்படுத்தப் பார்க்கிறார்கள் ஆனால் சிங்கள மொழியே முதன்மையானது என்ற அடிப்படையில் “ஏக்கிய றட” என்பது ஒற்றையாட்சி எனவே அர்த்தப்படுத்தப்படும்.

இந்நிலையில் “ஏக்கிய” என்ற சொல்லை விட்டு “எக்சத்” என பாவிக்கும்படி கேட்டிருக்கின்றேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுடன் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது,

குறித்த “ஏக்கிய றட்ட” எனும் சொல்லால் பாதிப்பில்லை  இருப்பினும் அதனை நான் மறுத்திருக்கின்றேன் சமஷ்டி இல்லாமல் ஒற்றையாட்சியே மீண்டும் கொண்டுவரப்படுமானால் எங்களுடைய தனித்துவங்கள் முழுமையாக அழிக்கப்படும் இதற்கு சிறந்த உதாரணம் மகாவலி தண்ணீர் வடப்பகுதிக்கு வரவில்லை ஆனால் மகாவலியின் பெயரால் வடக்கு வாழ் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவற்றில் சிங்கள குடியேற்றங்களை செய்துள்ளார்கள்.

மேலும் வடக்கு, கிழக்கு இணைப்பும் இல்லை என்ற நிலையிலேயே நிற்பதாக அறிகிறேன் இது எமக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கின்றது. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் மக்களுக்கும் திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மக்களுக்கும் வழங்கலாம் என்ற கதை இருந்தது.

இதன் அர்த்தம் வடக்கு கிழக்கு எந்த காலத்திலும் இணைக்கப்பட கூடாது என்பதே மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த 35 வருடங்களில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருக்கின்றது.

இதன் உண்மை என்னவென்றால் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை வெளி மாகாணங்களில் இருந்து கொண்டு வந்து குடியேற்றியுள்ளது என்பதாகும். வடக்கு கிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்டு சிங்கள குடியேற்றங்களால்  நிரப்பப்பட்டதோ அவ்வாறே வட மாகாணமும் நிரப்பப்படும் இதனால் தமிழர்களின் தனித்துவம் முழுமையாகவே 25 வருடங்களில் அழிக்கப்படும்.

மேலும் சுயாட்சி இல்லாவிட்டால் எங்களுடைய தனித்துவம் முழுமையாக அழிக்கப்படும் நாங்கள் வேறு கலாச்சாரம் பண்பாடு ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் எனவே வடக்கு ,கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீமையை மட்டுமே பெற்றுக்கொடுக்கும் என்று தெரிவித்தார்.