இறுதி முயற்சி - திரைப்பட விமர்சனம்

10 Oct, 2025 | 02:41 PM
image

இறுதி முயற்சி - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வரம் சினிமாஸ்

நடிகர்கள் : ரஞ்சித், மெகாலீ மீனாட்சி, விட்டல் ராவ், புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர்.

இயக்கம் : வெங்கட் ஜனா

மதிப்பீடு : 2/5

'பிக் பொஸ்' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகி சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகனாக வலம் வந்த நடிகர் ரஞ்சித்-  கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் :இறுதி முயற்சி'. உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழக மாநகர் ஒன்றில் துணிக்கடை நடத்துபவர் தொழிலதிபர் ரவிச்சந்திரன் ( ரஞ்சித்) . மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்தி வரும் இவர் -கொரோனா தொற்று மற்றும் விவரிக்க இயலாத காரணங்களால் தொழிலில் நஷ்டம் அடைகிறார் . இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக ராஜப்பா ( விட்டல் ராவ்) என்ற தனியார் நிதி நிறுவன அதிபரிடம் கடன் வாங்குகிறார்.

இந்த கடன் வட்டியுடன் சேர்ந்து விட.. ரவிக்கு சுமையாகி விடுகிறது. இதனால் கடன் கொடுத்த ராஜப்பா மற்றும் அவரது கும்பல் ரவிக்கு நெருக்கடி தருகிறார்கள் . அத்துடன் நேரில் வருகை தந்து அவர் மனைவியையும், பெண் பிள்ளையையும் ஆபாசமாக பேசுகிறார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி விடுவேன் என எச்சரிக்கிறார்கள்.

அடியாட்களை அவர்களது வீட்டு வாசலில் காவலுக்கு வைத்து அவதானிக்கிறார். ரவி கடனை திருப்பி செலுத்துவதற்காக கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைய... இறுதியாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்காக முடிவெடுக்கிறார்.  அதில் அவர் உயிரிழந்தாரா? இல்லை பிழைத்தாரா? என்பதுதான் படத்தின் கதை. 

இந்த கதைக்கு சுவராசியம் சேர்க்கும் வகையில் அர்பன் நக்சல் எனக் குறிப்பிடப்படும் போராளி ஒருவர் காவல்துறையின் தேடலை திசை திருப்பி, ரவியின் வீட்டில் தஞ்சமடைகிறார். தொழிலாளர்களுக்காக வன்முறையுடன் போராடும் குணம் கொண்ட அந்த போராளி-  முதலாளித்துவத்துடன் இயங்கும் ரவியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதையும் கிளை கதையாக திரைக்கதையில் இணைத்திருக்கிறார் இயக்குநர்.

இறுக்கமான சூழலில் கதையின் நாயகன்... கதையை வழிநடத்திச் செல்வதால்...பொழுதுபோக்கு அம்சங்களை வழங்காமல் கதையை நேரடியாக விவரிப்பதில் இயக்குநர் அதீத கவனம் செலுத்துவதால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. நம்பகத்தன்மை அதிகரிக்கும் வகையிலான காட்சிகளும் இடம்பெறாததால்.. இயக்குநர் பகிர்ந்து கொள்ள விரும்பிய விடயம் ரசிகர்களை சென்றடைவதில் தடுமாற்றம் காண்கிறது.

கந்து வட்டி மாஃபியா கும்பலின் கொடூர முகத்தை காட்சிப்படுத்திய இயக்குநர்... அதனை ரசிகர்களுக்கு கடத்துவதில் தடுமாறுகிறார். கடன் சுமையின் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதற்கான சூழலை உணர்வுபூர்வமாக விவரித்த இயக்குநர்.. கடன் வாங்க விரும்புவோர்களுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். 

ரவி எனும் தொழிலதிபராக நடித்திருக்கும் ரஞ்சித் - கடன் பிரச்சனை-  குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் தொடர்பான பிரச்சனை-  கடனை திருப்பி செலுத்துவதற்காக எடுக்கும் முயற்சி-  என நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள இடங்களில் தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார். 

ரவியின் மனைவி வாணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மெகாலீ மீனாட்சி - கதாபாத்திரத்தின் உணர்வைத் துல்லியமாக அவதானித்து அதனை நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்.

ஒளிப்பதிவு -பின்னணி இசை- படத்தொகுப்பு -கலை இயக்கம் -பாடல்கள்- என தொழில் நுட்ப அம்சங்கள் அனைத்தும்... இந்த படைப்பு சிறிய முதலீட்டு தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்துகிறது.

இருப்பினும் உச்சகட்ட காட்சியை பார்வையாளர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு உருவாக்கி இருப்பதை பாராட்டலாம். இதற்காக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பதையும் பாராட்டலாம்.

இறுதி முயற்சி -  மனதில் பதியாத கன்னி முயற்சி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்